மோட்டார் சைக்கிள்-தனியார் பஸ் மோதல்: ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி
சித்ரதுர்காவில் மோட்டார் சைக்கிள்-தனியார் பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்;
சிக்கமகளூரு: சித்ரதுர்காவில் மோட்டார் சைக்கிள்-தனியார் பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விவசாயி
சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே தாலுகா பி.துர்கா கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50) விவசாயி. இவருடைய மனைவி சைலஜா (42). இந்த தம்பதியின் மகன்கள் வீரேஷ் (15), சந்தோஷ் (13).
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகராஜ் தனது குடும்பத்துடன் தாவணகெரே மாவட்டம் சன்னகிரி அருகே உள்ள கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று முன்தினம் இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் நாகராஜ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் பி.துர்கா நோக்கி சென்று கொண்டிருந்தார்.
4 பேர் சாவு
அப்போது அவர்கள் ஒலல்கெேர அருகே தும்பி கிராமத்தின் அருகே வந்தபோது, எதிரே வந்த தனியார் பஸ்சும், நாகராஜ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் இருந்து 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், நாகராஜ், சைலா, வீரேஷ், சந்தோஷ் ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஒலல்கெேர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், பலியான 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம்
இதுபற்றிய தகவல் அறிந்ததும் நாகராஜின் உறவினர்கள் ஒலல்கெேர அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். 4 பேரின் உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.
இதுகுறித்து ஒலல்கெேர போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவரை கைது ெசய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.