தீவிரவாதிகளுக்கு எதிரான இயக்க தலைவர் கோவில்களில் சாமி தரிசனம்

தீவிரவாதிகளுக்கு எதிரான இயக்க தலைவர் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.;

Update: 2022-03-24 21:33 GMT
திருச்சி
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் மனிந்தர்ஜீத் பிட்டா. இவர் ஏ.ஐ.ஏ.டி.எப். எனப்படும் அகில இந்திய ஆண்ட்டி டெரரிஸ்ட் ப்ரண்ட் தலைவர் (தீவிரவாதிகளுக்கு எதிரான இயக்க தலைவர்). இவரை கொல்வதற்காக தீவிரவாதிகள் 2 முறை முயன்றும் உயிர் தப்பியுள்ளார். இதனால் இவருக்கு இசட்பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பிட்டா ஆன்மிக சுற்றுப்பயணமாக 4 நாட்கள் தமிழகம் வந்தார். நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் திருச்சி வந்த அவர் ஓட்டலில் இரவு தங்கினார். நேற்று காலை உறையூர் வெக்காளியம்மன்கோவில், திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், சமயபுரம் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்துக்கு சென்ற அவர், கோட்ட மேலாளர் மனீஷ்அகர்வாலை சந்தித்து பேசினார். அதன்பிறகு அவர் நேற்று மாலை கார் மூலம் திருச்சியில் இருந்து கும்பகோணம் சென்றார். கும்பகோணத்தில் இன்று(வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் அவர் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். நாளை கும்பகோணத்தில் இருந்து திருச்சி வரும் பிட்டா, இரவு திருச்சியில் தங்குகிறார். மறுநாள் 27-ந் தேதி திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். திருச்சியில் நேற்று அவர் சென்ற கோவில்கள் மற்றும் வழித்தடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்