தென்னை மரத்தில் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்தும் முறை- விவசாயிகளிடம் மாணவிகள் செயல் விளக்கம்
தென்னை மரத்தில் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளிடம் மாணவிகள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
நம்பியூர்
தென்னை மரத்தில் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளிடம் மாணவிகள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
செயல் விளக்கம்
தென்னந்தோப்பில் காண்டாமிருக வண்டு தாக்கத்தால் தென்னை மரங்களின் வளர்ச்சி குன்றி காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் முறை குறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் விகாஷினி, அஸ்மிதா, ஆராதனா, சாலா ஆகியோர் கிராம தங்கல் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு புதிய யுக்தி மற்றும் உரம் தயாரித்தல் பயிற்சி அளித்து வருகின்றனர்.
அதன்படி கோபி அருகே உள்ள நாதிபாளையம் கிராமத்தில், விவசாயிகளிடம் தென்னைமரத்தில் காணப்படும் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறை குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.
அழிக்கலாம்
இதுகுறித்து மாணவிகள் விவசாயிகளிடம் கூறியதாவது:-
தென்னந்தோப்புகளின் அருகில் மக்கும் நிலையில் உள்ள பொருட்கள், உரக்குழிகள் போன்றவற்றை இல்லாமல் செய்வதன் மூலம் புழுக்கள் உண்டாகாமல் தடுக்கலாம். தென்னந்தோப்புகளில் அருகே உள்ள மக்கும் குப்பைகளை அடிக்கடி தென்னந்தோப்புகளில் வைப்பதன் மூலம், காண்டாமிருக வண்டுகளைக் கவர்ந்திழுத்து அழிக்கலாம்.
உரக்குழிகளில் மெட்டாரைசியம் அனிசோபிலியே என்ற பூஞ்சாணத்தைத் தெளிப்பதன் மூலம் குப்பையில் தோன்றும் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
குருத்துகளில் காணப்படும் முதிர்ந்த வண்டுகளைக் கூர்மையான, நீளமான இரும்புக் கம்பிகளைக் கொண்டு குத்தி அழிக்கலாம். வேப்பங்கொட்டைத்தூள் மற்றும் மணலை 1:2 என்ற விகிதத்தில் கலந்து மட்டைகளுக்கு அடியில் வைக்கலாம்.
வண்டுகளை அழிக்கலாம்
ரைனோலியூர் எனப்படும் கவர்ந்திழுக்கும் வேதிப்பொருளைத் தண்ணீரில் கலந்து, ஏக்கருக்கு 2 வாளிகள் என்ற அளவில் வைப்பதன் மூலம் ஆண், பெண் வண்டுகளைக் கவர்ந்திழுக்கலாம். அதைத் தினசரி கவனித்து அழித்துவிட வேண்டும்.
5-10 நாப்தலின் குண்டுகளை மெல்லிய துளைகள் கொண்ட கனமான பைகளில் இட்டு, இளங்குருத்து, முதிர்ந்த மட்டைகள் ஆகிய பகுதிகளின் அடியில் வைப்பதன் மூலம் வண்டுகளை அழிக்கலாம்.
இவ்வாறு மாணவிகள் விவசாயிகளிடம் கூறினார்கள்.