கார் கவிழ்ந்ததில் முதியவர் பலி
கார் கவிழ்ந்ததில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
குன்னம்:
துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு...
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள ஆவினங்குடி கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 88). விவசாயி. இவர் தனது மகன்கள் பத்மநாபன், பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கிருஷ்ணசாமி, பத்மநாபனின் மகள் ரோஷினி(18), பன்னீர்செல்வத்தின் மகன் புவனேஸ்வரன்(25) ஆகிய 3 பேரும் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, மீண்டும் பெரம்பலூர் வழியாக ஆவினங்குடி கிராமத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை புவனேஸ்வரன் ஓட்ட கிருஷ்ணசாமியும், ரோஷினியும் பின்னால் அமர்ந்து வந்தனர்.
முதியவர் சாவு
பெரம்பலூர் மாவட்டம் சின்னாறு கிராமத்தில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் நிலைதடுமாறிய கார் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள மைல் கல் மற்றும் தடுப்புச்சுவர் மீது மோதி எதிர்ப்புறமுள்ள சாலைக்கு சென்று தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கிருஷ்ணசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புவனேஸ்வரனுக்கும், ரோஷினிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கிருஷ்ணசாமியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணசாமியின் மகன் பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின்பேரில் மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.