18 வயது முடியாதவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது
தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் பேசிய போக்குவரத்து துணை ஆணையர் கருப்புசாமி, 18 வயது முடியாதவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டக்கூடாது என்று கூறினார்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் பேசிய போக்குவரத்து துணை ஆணையர் கருப்புசாமி, 18 வயது முடியாதவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டக்கூடாது என்று கூறினார்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
தமிழக அரசு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு தஞ்சை வட்டார போக்குவரத்து அதிகாரி முருகன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த் வரவேற்றார்.
விழாவில் தஞ்சை சரக போக்குவரத்து துணை ஆணையர் கருப்புசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
தண்டனை கிடைக்கும்
பள்ளி வாகனங்கள், உரிய உரிமம் பெற்று இயக்க வேண்டும். சாலைகளில் செல்லும் போது உரிய போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து செல்ல வேண்டும். 18 வயது நிரம்பாதவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது. அவ்வாறு வாகனம் ஓட்டினால், புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த விதியின்படி வாகனம் ஓட்டுபவரின் பெற்றோர்களுக்கு தண்டனை கிடைக்கும். எனவே மாணவர்கள் 18 வயது முடிவடையும் வரை வாகனங்களை இயக்கக்கூடாது.
அதே போல் உங்கள் வீடு, மற்றும் அருகில் உள்ள வீடுகளில் யாராவது 18 வயது நிரம்பாதவர்கள் வாகனங்களை இயக்கினால் எடுத்துக்கூற வேண்டும். உங்களின் பெற்றோர்கள் கார்களை ஓட்டும் போது கண்டிப்பாக சீட் பெல்ட் அணியுமாறு கூற வேண்டும். போலீசார் கூறுவதை விட, பிள்ளைகள் கூறினால் பெற்றோர்கள் கண்டிப்பாக கேட்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.