மூக்கனேரியில் படகு சவாரிக்கு ஏற்பாடு
சேலம் மூக்கனேரியில் படகு சவாரி நடத்து குறித்து மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
சேலம்:-
சேலம் மூக்கனேரியில் படகு சவாரி நடத்து குறித்து மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
மூக்கனேரி
சேலம் மூக்கனேரியை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட போடிநாயக்கன்பட்டி, அல்லிக்குட்டை, மூக்கனேரி ஆகிய ஏரிகள் ரூ.69 கோடியில் மேம்படுத்தப்படும் என சேலத்தில் நடந்த விழாவில் அறிவித்தார். சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் சேர்வராயன் மலை அடிவாரத்தில் மூக்கனேரி அமைந்துள்ளது.
திட்ட அறிக்கை
ஏற்காடு மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் மூக்கனேரியை வந்தடைகிறது. தற்போது இந்த ஏரி ஆகாய தாமரை படர்ந்து சாக்கடை கழிவுநீர் கலந்து காணப்படுகிறது. எனவே இந்த ஏரியை தூர்வாரி கரைகள் பலப்படுத்தப்படும். அதே போன்று. ஏரியில் படகு சவாரி நடத்துவது, கரைகளில் நடைபாதையை சீரமைத்தல், ஏரிக்கு வரும் கழிவுநீரை தடுத்து வெளியேற்றி ஏரியை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னதாக பழைய பஸ் நிலையம் அருகில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.23 கோடியே 53 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை அவர்கள் பார்வையிட்டனர். ஆய்வின் போது துணை மேயர் சாரதாதேவி, உதவி செயற்பொறியாளர்கள் சிபி சக்கரவர்த்தி, செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.