7-ம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை
குளச்சல் அருகே 7-ம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தாயை மிரட்டியது காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குளச்சல்:
குளச்சல் அருகே 7-ம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தாயை மிரட்டியது காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
7-ம் வகுப்பு மாணவன்
குளச்சல் அருகே உள்ள மேற்கு நெய்யூர் அஞ்சாலியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி இந்திரா ராணி (வயது 41). இவர்களது 2-வது மகன் ஸ்பவின் (12).
அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7- ம் வகுப்பு படித்து வந்தான்.
தற்கொலை
இந்தநிலையில் கடந்த 22-ந் தேதி மாலை ஸ்பவின் வீட்டு கூரையில் துண்டால் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்தான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இந்திரா ராணி, மகன் ஸ்பவினை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு டாக்டர் பரிசோதித்து பார்த்து விட்டு, மாணவன் ஸ்பவின் இறந்து விட்டான் என்று கூறினார். இது குறித்து தாய் இந்திரா ராணி குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மாணவன் ஸ்பவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மகன் தற்கொலை குறித்து அறிந்ததும், வெளிநாட்டில் இருந்து சசிகுமார் நேற்று ஊருக்கு திரும்பி வந்தார். பிரேத பரிசோதனைக்கு பின்பு நேற்று மாணவனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
நிதி நிறுவன ஊழியர் மிரட்டல்
இந்த நிலையில் தாய் இந்திரா ராணி குளச்சல் போலீஸ் நிலையத்துக்கு ஆன் லைனில் மற்றொரு புகார் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் சுய உதவிக்குழு தலைவியாக இருந்து வருகிறேன். தக்கலையில் இயங்கும் ஒரு தனியார் நிதி நிறுவனம் மூலம் ரூ.8 லட்சத்து 26 ஆயிரத்து 468 கடன் பெற்று பங்கீடு செய்து மாதா மாதம் தவணை செலுத்துவது வழக்கம்.
கடந்த 22-ந் தேதி மாலை நிதி நிறுவனத்தில் இருந்து ஊழியர் ஒருவர் செல்போனில் பேசினார். அப்போது உங்கள் குழுவிலிருந்து பணம் கட்டவில்லை. குழு கூட்டம் நடக்கும் இடத்துக்கு வருவேன் என்றார். அதற்கு நான் வட்டியுடன் மறுநாள் கட்டிவிடுகிறேன் என்றேன். பின்னர் மாலை குழு கூட்டம் நடந்த இடத்திற்கு அந்த நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் என்னிடம் பணம் கட்ட மாட்டாயா? என கேட்டு தகாத வார்த்தையால் பேசினார்கள். அப்போது எனது 2-வது மகன் ஸ்பவின் என்னோடு நின்று கொண்டிருந்தான். நிதி நிறுவன ஊழியர்களின் மிரட்டலால் பயந்து போன ஸ்பவின் வீட்டுக்கு சென்று விட்டான்.
நடவடிக்கை
நான் நிதி நிறுவன ஊழியர்களிடம் சமாதானம் பேசிக்கொண்டிருந்தேன். இந்த சமயத்தில் மூத்த மகனின் அலறல் சத்தம் கேட்டு நான் உடனே வீட்டுக்கு ஓடினேன். அப்போது அங்கு ஸ்பவின் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தான்.
எனது மகனின் தற்கொலைக்கு தக்கலை தனியார் நிதி நிறுவன ஊழியர்கள்தான் காரணம். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.
விசாரணை
ஆன் லைன் புகார் குறித்து குளச்சல் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் கூறியதாவது,‘மாணவன் தற்கொலை செய்த சம்பவம் நடந்த தினத்தன்று நாங்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினோம். தற்போது ஆன் லைனில் அனுப்பப்பட்டுள்ள புகார் குறித்தும் விசாரணை நடத்துகிறோம்’ என்றார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.