கூட்டுறவு வங்கியை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

சின்னதாராபுரம் அருகே கூட்டுறவு வங்கியை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-24 19:52 GMT
க.பரமத்தி, 
நகைக்கடன் தள்ளுபடி
தமிழக முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பின் படி, தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு குறைவாக நகைகளை அடமானம் வைத்த பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது, அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நகை வழங்கப்பட்டு வருகிறது. 
இந்தநிலையில், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னதாராபுரம் அருகே உள்ள ராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 56 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கூட்டுறவு சங்கம் சார்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.
வங்கி முற்றுகை
இதனைதொடர்ந்து நகைக்கடன் பெற்றவர்கள் நேற்று வங்கிக்கு சென்று உள்ளனர். ஆனால் வங்கி அதிகாரிகள் ராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர், துணை தலைவர், செயலாளர் மீது ஏற்கனவே புகார் உள்ள நிலையில் நகைகள் இப்போது திருப்பித்தர முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் வங்கியை முற்றுகையிட்டு  அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சின்னதாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களை சமாதானப்படுத்தி 6 நாட்களுக்குள் தங்களது நகைகள் திரும்ப வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்