சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற கோரி மனு தாக்கல்
அருப்புக்கோட்டை அருகே வெள்ளையாபுரத்தில் பூசாரி ஒருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற கோரிய வழக்கின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பந்தல்குடி இன்ஸ்பெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர்,

மனு தாக்கல்
விருதுநகர் மாவட்டம் வெள்ளையாபுரத்தை சேர்ந்த சூர்யா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- என் தந்தை செந்தில் கிராம கோவில் பூசாரியாக இருந்தார். முன்விரோதம் காரணமாக எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காரை வைத்து இடித்தும் பயங்கர ஆயுதங்களால் தாக்கியும் கடந்த 13-ந் தேதி என் தந்தையை கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து பந்தல்குடி போலீசாரிடம் புகார் அளித்தோம். போலீசார் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கு பதிவு செய்தனர்.மேலும் விபத்தில் இறந்தது போல் சித்தரித்து உள்ளனர். பல மணி நேரம் தாமதமாகவே வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க வைக்கும் வகையில் போலீசார் செயல்படுகின்றனர்.
எனவே எனது தந்தை மரணம் அடைந்தது தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி.விசாரணை நடத்த உத்தரவிட வேண்டுகிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
உத்தரவு
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பந்தல்குடி இன்ஸ்பெக்டர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 12-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.