கரூரில் ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகள் மீட்பு

கரூர் மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளை வருவாய் துறையினர் மீட்டனர்.

Update: 2022-03-24 19:48 GMT
கரூர் ,
மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
புகழூர் தாலுகா வேட்டமங்கலம் கிராமம் ஓலப்பாளையம் பகுதியில் உள்ள நொய்யல் கிளை வாய்க்காலை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதையடுத்து, நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ள பகுதிகளை உடனடியாக அகற்றுமாறு மதுரை ஐகோர்ட்டு வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, புகழூர் தாசில்தார் மதிவாணன் தலைமையில் மண்டல துணை தாசில்தார் அன்பழகன், உதவி பொறியாளர்கள் (பாசன பிரிவு) சதீஷ்குமார், கார்த்தி, வருவாய் ஆய்வாளர் ரஹமத்துல்லா, கிராம நிர்வாக அலுவலர் மலையப்பசாமி மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு நொய்யல் கிளை வாய்க்காலின் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இதேபோல் தவுட்டுப்பாளையத்தில் காவிரி ஆற்றுப்புறம்போக்கில் விவசாயி ஒருவர் 1½ ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கோரை பயிரிட்டு இருந்தார். இதனைதொடர்ந்து போளூர் தாசில்தார் தலைமையிலான வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ஜெகதாபி ஏரி
மண்மங்கலம் தாலுகா நெரூர் வடக்கு கிராமம், காவிரி ஆற்று படுகைகளில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் ஜெகதாபி ஏரி 37 ஏக்கர் பரப்புடையது. அதில் 4 ஏக்கர் 40 சென்ட்டில் வேலி அடைத்தும் உழவடை செய்தும், போர் பட்டி அமைத்து செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் திருமாநிலையூர் கிராமம் அமராவதி ஆற்றின் வலது கரை வாய்க்காலில் 30 சென்ட் நிலத்தில் சாயப்பட்டறை சுற்றுச்சுவர், மாட்டு கொட்டகை மற்றும் வேலி அடைத்து செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் ஆர்.டி.ஓ. பாலசுப்பிரமணியன் தலைமையில் கரூர் தாசில்தார் பன்னீர்செல்வம், அமராவதி உதவி பொறியாளர் ராஜகோபால் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களால் அகற்றப்பட்டன.
நச்சலூர்
நங்கவரம் பேரூராட்சிக்குட்பட்ட வெள்ளக்கல் பகுதியில் உள்ள குட்டையை ஒருவர் ஆக்கிரமித்து 3½ ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்து இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நங்கவரம் பேரூராட்சி செயல் அலுவலர் வேல்முருகன், வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் ராஜலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் டிராக்டர் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றினர்.
தோகைமலை
தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட பொருந்தலூர், கூடலூர், வடசேரி, கல்லடை உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகள் மீட்கப்பட்டன. அதன்படி தோகைமலை அருகே சின்னரெட்டிபட்டி அம்மா குளத்தில் வாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதனால் மழைக்காலங்களில் குளம் நிறைந்து நீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்.டி.ஓ., கலெக்டர், முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த நிலையில் குளித்தலை ஆர்.டி.ஓ. புஷ்பதேவி, குளித்தலை தாசில்தார் விஜயா, சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி, கிராம நிர்வாக அதிகாரி தீபக் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
வாழை சாகுபடி
அதனைத்தொடர்ந்து கூடலூர் ஊராட்சியில் கண்னூத்துபட்டி குளம் தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வாழை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இதனை குளித்தலை ஆர்.டி.ஓ. மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் அங்கு பயிரிடப்பட்டு இருந்த வாழைகள் வெட்டி அகற்றப்பட்டது. மேலும் குளக்கரை ஆழப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதேபோல் வடசேரி, கல்லடை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. 
கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்