பங்குனி உத்திர திருவிழாவுக்கு பிறகு உண்டியல் திறப்பு பழனி முருகன் கோவிலில் காணிக்கை மூலம் ரூ.2½ கோடி வருவாய்
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவுக்கு பிறகு நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. இதில் முதல்நாளில் காணிக்கை மூலம் ரூ.2½ கோடி வருவாயாக கிடைத்தது.
பழனி:
உண்டியல் காணிக்கை
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக கோவிலில் உள்ள உண்டியல்களில் செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது.
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 12-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 14-ந்தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இந்நிலையில் பங்குனி உத்திர திருவிழா முடிந்தபிறகு நேற்று பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இதற்கு பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். மதுரை துணை ஆணையர் பொன்சுவாமிநாதன், பழனி உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள், வங்கி அலுவலர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் என 150-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
ரூ.2½ கோடி வருவாய்
இந்த உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 56 லட்சத்து 44 ஆயிரத்து 910 வருவாயாக கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 128 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்கம் மற்றும் வெள்ளியாலான வேல், சங்கிலி, மோதிரம், பாதம், மயில், தொட்டில் உள்ளிட்ட பொருட்களும் கிடைத்தன. அதன்படி தங்கம் 808 கிராம், வெள்ளி 10 கிலோ (10,023 கிராம்) காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று(வெள்ளிக்கிழமை) தொடர்ந்து 2-வது நாளாக நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.