கரூரில் 27-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம்
கரூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 27-ந்தேதி நடக்கிறது.;
கரூர்,
கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் கரூர் மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து வருகிற 27-ந்தேதி ஜெயராம் கல்வியியல் கல்லூரியில் நடத்த உள்ள மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைக்க உள்ளார். காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளனர். இம்முகாமில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர் டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையல்பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம்.
இம்முகாம் முற்றிலும் இலவசமானது. வேலை வேண்டி விண்ணப்பிப்போர் தங்களுடைய சுயவிவரம், உரிய கல்விச்சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். வேலையளிப்போரும் மற்றும் வேலைவேண்டுவோரும் முகாம் தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை 04324-223555, 78128 48488 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.