குளித்தலையில் அரசு பஸ் சிறைபிடிப்பு
திருச்சியில் ஏறிய பயணிகளை கீழே இறக்கிவிட்டதால் குளித்தலையில் அரசு பஸ் சிறைபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பஸ் டிரைவர், கண்டக்டருக்கு மெமோ வழங்க பணிமனை மேலாளர் பரிந்துரை செய்தார்.
குளித்தலை,
அரசு பஸ்கள்
திருச்சி பகுதியிலிருந்து குளித்தலை வழியாக கரூர் மார்க்கமாக செல்லும் அரசு பஸ்கள் குளித்தலை பெரியபாலம், பஸ் நிலையம், சுங்ககேட் வழியாக செல்வது வழக்கம். இவ்வாறு செல்லும் அரசு பஸ்களில் குளித்தலை பெரியபாலம் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்காமல் நேரடியாக பஸ் நிலையம் வரை இயக்கி அங்கு பயணிகளை இறக்கி வந்தனர்.
இதனால் பயணிகள் பாதிக்கப்படுவதாக கூறி பெரியபாலம் பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
பயணிகளை கீழே இறக்கினர்...
அதன்படி குளித்தலை வழியாக இயக்கப்படும் அரசு பஸ்கள் அனைத்தும் பெரிய பாலம் பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும் என போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் மூலம் அந்தந்த பஸ் டெப்போகளுக்கு சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஒரு சில பஸ்களை தவிர மற்ற அரசு பஸ்கள் அனைத்தும் பெரிய பாலம் பஸ் நிறுத்தத்தில் நின்று சென்று வருகின்றன.
இந்தநிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியிலிருந்து திருச்சி- கரூர் மார்க்கமாக கோவை வரை செல்லும் அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. அதில், குளித்தலை பகுதியை சேர்ந்த சிலர் திருச்சியில் ஏறியுள்ளனர். அப்போது அந்த பஸ் கண்டக்டர் குளித்தலை பயணிகளை பஸ்சிலிருந்து கீழே இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. தாங்கள் பஸ்சில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டது குறித்து குளித்தலையில் உள்ள சமூக நல அமைப்பினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அரசு பஸ் சிறைபிடிப்பு
இதையடுத்து குளித்தலை நகரப்பகுதிக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக கோவை நோக்கி சென்ற அந்த அரசு பஸ்சை குளித்தலை பெரிய பாலம் அருகே புறவழிச்சாலையில் உள்ள மேம்பாலம் அருகே சமூகநல ஆர்வலர்கள் தடுத்து சிறைபிடித்தனர். மேலும் இது தொடர்பாக குளித்தலை அரசு பணிமனை மேலாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.அனைத்து பஸ்களும் குளித்தலை நகரப்பகுதிக்குள் வந்து செல்ல வேண்டும் என சுற்றறிக்கை இருப்பதாக சமூகநல ஆர்வலர்கள் தெரிவித்தும் அந்த பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர் அதை ஒரு பொருட்டாக கருதாமல் தாங்கள் பல ஆண்டுகளாக இதே வழித்தடத்தில் தான் பஸ்சை இயக்கி வருவதாக தெரிவித்தனர்.
மெமோ வழங்க பரிந்துரை
அப்போது அவர்களிடம் பேசிய குளித்தலை அரசு பணிமனை மேலாளர் கிருஷ்ணமூர்த்தி இனிவரும் காலங்களில் குளித்தலை நகரப்பகுதி வழியாகவே பஸ்சை இயக்க வேண்டும் என தெரிவித்து அந்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் விவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் உரிய வழித்தடத்தில் செல்லாத அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் பரிந்துரை செய்துள்ளார். அதன் பேரில் அந்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு ‘மெமோ’ வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பஸ் விடுவிக்கப்பட்ட பின்னர் புறவழி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பெரியபாலம் வழியாக குளித்தலை நகரப்பகுதிக்குள் இயக்கப்பட்டது. குளித்தலையில் அரசு பஸ் சிறைபிடிக்கப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.