நகைக்கடையில் வெள்ளி பொருட்கள் திருடிய 2 பெண்கள் கைது
நெய்வேலி அருகே நகைக்கடையில் வெள்ளி பொருட்கள் திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
நெய்வேலி,
நெய்வேலி அருகே இந்திராநகர் கும்பகோணம் சாலையில் நகைக்கடை நடத்தி வருபவர் நந்தகுமார் (வயது 45). இவர் நேற்று முன்தினம் காலை கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த 2 பெண்கள் கடையில் இருந்த வெள்ளி பொருட்களை வாங்கி பார்த்துவிட்டு, ஒருசில வெள்ளி பொருட்களை வாங்கிச் சென்றனர். அதன்பிறகு நந்தகுமார் அந்த பெண்களிடம் காண்பி்த்த வெள்ளி பொருட்களை சரிபார்த்தபோது, சில வெள்ளி பொருட்களை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த நந்தகுமார் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டபோது, வெள்ளி கொலுசு, வெள்ளி காப்பு, வெள்ளி பிரேஸ்லெட், மெட்டி உள்ளிட்ட ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை பெண்கள் 2 பேரும் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் நெய்வேலி வட்டம் 18 தென்னைமர வீதியை சேர்ந்த ராஜா மனைவி பிரியதர்ஷிணி(35), உளுந்தூர்பேட்டை மூலசத்திரத்தை சேர்ந்த ஏழுமலை மகள் ஜோதிகா(22) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டது.