12 மாதங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டால் காசநோயை குணப்படுத்தலாம்.கலெக்டர் அமர்குஷ்வாஹா பேச்சு

6 மாதம் முதல் 12 மாதங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டால் காச நோயை குணப்படுத்தலாம் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

Update: 2022-03-24 18:57 GMT
திருப்பத்தூர்

6 மாதம் முதல் 12 மாதங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டால் காச நோயை குணப்படுத்தலாம் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

காசநோய் கண்டறியும் முகாம் 

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார். மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து, துணை இயக்குநர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் குமரவேல் வரவேற்றுப் பேசினார்.

கலெக்டர் அமர்குஷ்வாஹா முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:-

காசநோயால் இந்தியாவில் 5 நிமிடத்திற்கு 2 பேர் வீதம் இறக்கின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 457 ஆகும். 2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பாக மத்திய அரசு காசநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியும் விதத்திலும், விரைவில் குணப்படுத்தும் வகையிலும் 3 வாரங்கள் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்களை நடத்த அறிவுறுத்தியுள்ளது.

குணப்படுத்தலாம்

 அதன்படி இந்த சிறப்பு முகாம் நடக்கிறது. குழந்தைகள் உள்பட அனைவரும் குறிப்பாக, சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், ஏற்கனவே காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு காசநோயின் அறிகுறிகள் ஏதேனும் காணப்பட்டால் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் சளி பரிசோதனை மற்றும் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். 

காசநோய் அறிகுறி உள்ளவர்கள் நோயின் தன்மைக்கேற்றவாறு 6 மாதம் முதல் 12 மாதங்கள் வரை சிகிச்சை எடுத்துக்கொண்டால் காசநோய் முற்றிலும் குணமடையக் கூடியதாகும். எனவே பொது மக்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி பரிசோதனை மேற்கொண்டு தங்களது குழந்தைகளையும் இதர குடும்பத்தினரையும் காசநோயிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜேந்திரன், ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவர் சங்கீதா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்