திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்;15 பேர் காயம்
திருப்பத்தூர் அருகே நெடுமரம் கிராமத்தில் உள்ள மலைஅரசி அம்மன் கோவில் பங்குனி விழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 15 பேர் காயமடைந்தனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே நெடுமரம் கிராமத்தில் உள்ள மலைஅரசி அம்மன் கோவில் பங்குனி விழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 15 பேர் காயமடைந்தனர்.
மஞ்சுவிரட்டு
திருப்பத்தூர் அருகே உள்ளது நெடுமரம். இந்த கிராமத்தில் உள்ள மலை அரசி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மஞ்சுவிரட்டு நேற்று நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து நெடுமரம், ஊர்குளத்தான் பட்டி, சில்லம்பட்டி, எம்.புதூர், சிறுகூடல்பட்டி, ஆகிய 5 ஊர் சார்பில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 500-க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகள் பங்கேற்றன. காலை 9 மணி முதல் நெடுமரம் வழியாக செல்லும் பைபாஸ் சாலையோரத்தில் உள்ள வயல்வெளிகளில் நூற்றுக்கணக்கான காளைகள் கட்டுமாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன.
தொழு மாடு
அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் காளைகளை ஆர்வத்துடன் அடக்க முயன்றனர். இதில் சில காளைகள் சீறிபாய்ந்து வந்து பிடிக்க வந்த இளைஞர்களை முட்டி தள்ளிவிட்டு சென்றது. சில காளைகள் சீறி வந்த நிலையில் அங்கு திரண்டிருந்தவர்களிடம் பிடிப்பட்டது. இந்த கட்டுமாடு நிகழ்ச்சியை ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் அந்த பகுதியில் மினி வேன், டிராக்டர், ஜீப் ஆகிய வாகனங்களில் நின்றபடி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
அதைத்தொடர்ந்து மதியம் தொழு மாடு அவிழ்க்கும் நிகழ்ச்சிக்கு ஊர்த்தலைவர்கள் மேள தாளங்களுடன் அதிர்வேட்டுகள் முழங்க கோவில் காளையுடன் வேட்டி துண்டுகளுடன் தொழுவிற்கு வந்தனர்.
பரிசு
அதன் பின்னர் அங்கு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒவ்வொரு காளையாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. இந்த காளையை அடக்க 20 பேர் கொண்ட மாடு பிடி குழுவினர் கலந்துகொண்டு காளைகளை அடக்கினர். இதில் சில காளைகள் பிடிப்பட்டன. சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் சென்றது. மஞ்சுவிரட்டில் பங்கேற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு விழா கமிட்டி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.
15 பேர் காயம்
இந்த மஞ்சுவிரட்டில் 15 பேர் மாடு முட்டியதில் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர். இந்த மஞ்சுவிரட்டுக்கான ஏற்பாடுகளை ஐந்து ஊர் கிராமத்தின் சார்பில் நாட்டார்கள் செய்திருந் தனர்.
மஞ்சுவிரட்டில் திருப்பத்தூர் தாசில்தார் வெங்கடேசன், மண்டல துணை தாசில்தார் செல்லமுத்து மற்றும் வருவாய் துறையினர் கால்நடை துறையினர், சுகாதாரத்துறையினர் கலந்துகொண்டனர். திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பி ரண்டு ஆத்மநாபன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுட்டிருந்தனர்.