விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முத்துப்பேட்டை அருகே விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்துப்பேட்டை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முத்துப்பேட்டை அருகே விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
முத்துப்பேட்டை அருகே சங்கேந்தி கடைத்தெருவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் யோகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகையன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் தெட்சிணாமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, உமேஷ் பாபு, வெங்கடாச்சலம், விவசாய சங்க பிரதிநிதிகள் சுப்பிரமணியன், சிவசந்திரன், பிரஷ்நேவ் உட்பட நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கோஷங்கள் எழுப்பினர்
மறியல் போராட்டத்தின் போது இந்த ஆண்டு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு எக்டேர் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும், முத்துப்பேட்டை பாதிக்கப்பட்ட ஒன்றியமாக தேர்வு செய்யப்பட்டும், விவசாயிகளிடம் இருந்து நிவாரணத்திற்காக ஆவணங்கள் கிராம நிர்வாக அதிகாரியால் பெறப்பட்டும் இதுநாள் வரையில் நிவாரணம் வழங்காமல் உள்ளதை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுத்து உடன் வழங்கிடவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.
பேச்சு வார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் வேளாண்மை துறை இணை இயக்குனர் ரவீந்திரன், முத்துப்பேட்டை வேளாண்மை துறை உதவி இயக்குனர் சாமிநாதன், முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை மற்றும் வருவாய்த்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் விடுபட்ட விவசாயிகளுக்கு 15 தினங்களுக்குள் காப்பீட்டு தொகை வழங்கவும், ஆவணங்கள் வழங்க வேண்டிய விவசாயிகளுக்கு 30 தினங்களுக்குள் காப்பீட்டு தொகை வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்து பூர்வமாக அதிகாரிகள் தரப்பில் ்கொடுக்கப்பட்டது இதனையடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.