கொத்தடிமை முறையில் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தினால் உரிமையாளர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை-உதவி ஆணையர் எச்சரிக்கை

கொத்தடிமை முறையில் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தினால் உரிமையாளர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வழி உள்ளதாக உதவி ஆணையர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

Update: 2022-03-24 18:48 GMT
நாமக்கல்:
நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த 7-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சிறப்பு வாரமாக கடைபிடிக்கப்பட்டது. குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாக ஊதியம் வழங்குதல், குறிப்பிட்ட கால நிர்ணயம் இல்லாமல் நீண்ட நேரம் வேலை வாங்குவது, அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்களுக்கு முன்பணம் வழங்கி அவர்களை வேலை வாங்குவது, ஈமச்சடங்கிற்கு கூட குடும்பத்தினரை சென்று பார்க்க அனுமதிக்காதது, உடல் சார்ந்த வன்முறைக்கு தொழிலாளர்களை உட்படுத்துவது போன்ற உரிமைகள் பறிக்கப்பட்டு இருந்தால் அந்த தொழிலாளி கொத்தடிமை தொழிலாளியாவார்.
கொத்தடிமைகளாக நடத்தப்படுவது கண்டறியப்பட்டால் 18004252650 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் தொழிலாளர்களை கொத்தடிமை முறையில் பணியில் ஈடுபடுத்தும் உரிமையாளர்கள் மீது கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு குறையாத வகையில் கடுமையான சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்