நாமக்கல் மாவட்டத்தில் 57,622 பயனாளிகளுக்கு ரூ.231½ கோடி நகைக்கடன் தள்ளுபடி-அதிகாரி தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் 57,622 பயனாளிகளுக்கு ரூ.231½ கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
நாமக்கல்:
நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செல்வக்குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கூட்டுறவு நகர வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க கூட்டுறவு வேளாண்மை, ஊரக வளர்ச்சி வங்கிகள், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மற்றும் மலைவாழ் பல்நோக்கு கூட்டுறவு சங்கம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 40 கிராமிற்கு நகைகளை அடமானம் வைத்து பெற்ற பொது நகைக்கடன்கள் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையால் வகுக்கப்பட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு நிதித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு தணிக்கை துறையினரின் ஆய்வுக்கு உட்படுத்தி தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் தகுதி பெற்ற 57 ஆயிரத்து 622 பயனாளிகளுக்கு ரூ.231 கோடியே 41 லட்சம் மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன.
நகைக்கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகள் தாங்கள் நகைக்கடன் பெற்ற சங்கம் அல்லது வங்கிகளை நேரில் அணுகி, நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.