நாமக்கல்லில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: தர்பூசணி பழங்கள் விற்பனை சூடுபிடித்தது
நாமக்கல்லில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக தர்பூசணி பழங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
நாமக்கல்:
சுட்டெரிக்கும் வெயில்
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சாலையோரம் விற்பனை செய்யப்படும் இளநீர், கரும்புச்சாறு, நீர்மோர் உள்ளிட்டவற்றை குடித்து தாகம் தீர்த்து வருகின்றனர். மேலும் பழச்சாறுகளையும் அதிகளவில் குடிக்கின்றனர்.
நாமக்கல் நகரில் திருச்செங்கோடு சாலை, சேலம் சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு உள்ளன. இவற்றை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி வாங்கி சாப்பிடுவதை பார்க்க முடிகிறது. மேலும் சிலர் மொத்தமாகவும் தர்பூசணிகளை வாங்கி செல்கின்றனர்.
தர்பூசணி விற்பனை
இதனால் தர்பூசணி பழங்கள் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. திண்டிவனம் பகுதியில் இருந்து வாங்கி வரப்படும் இந்த பழங்கள் கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மற்ற பழங்களை ஒப்பிடும் போது இதன் விலை மலிவாக இருப்பதால் தர்பூசணி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுவதை காண முடிகிறது. இதனால் தர்பூசணி வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.