லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது

திருவண்ணாமலை அருகே பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-24 18:47 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட னர். 

 பட்டா மாற்றம்

திருவண்ணாமலை தாலுகா குளக்கரைவாடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது தந்தை சங்கரின் மகன் மீது அவரது இடத்தை தானசெட்டில்மெண்ட் செய்து உள்ளார். 

இந்த இடத்திற்கு பட்டா மாற்றம் செய்ய சங்கர் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளார். இது சம்பந்தமாக கருத்துவாம்பாடி கிராம நிர்வாக அலுவலர் கலைவாணனை அவர் அணுகி உள்ளார். 

அப்போது பட்டா மாற்றம் செய்து கொடுக்க கிராம நிர்வாக அலுவலர் ரூ.6 ஆயிரம் லஞ்சமாக கேட்டு உள்ளார். லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத சங்கர் இதுகுறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

போலீசாரின் ஆலோசனைப்படி சங்கர் மீண்டும் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் பேசியுள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் ரூ.6 ஆயிரத்தை கிராம உதவியாளர் அண்ணாமலையிடம் கொடுக்க சொல்லியுள்ளார். 

பின்னர் சங்கர் கிராம உதவியாளர் அண்ணாமலையிடம் பேசிய போது அவர் நாயுடுமங்கலத்தில் உள்ள தனது நிலத்திற்கு வர சொல்லியுள்ளார். 

இதுகுறித்து சங்கர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் போலீசார் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய 5,500 ரூபாயை சங்கர், கிராம உதவியாளர் அண்ணாமலையிடம் கொடுத்து உள்ளார். 

அப்போது அங்கு பதுங்கி இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன், இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் கிராம உதவியாளரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர்.

கிராம நிர்வாக அலுவலர் கைது

விசாரணையில் அவர் கிராம நிர்வாக அலுவலர் சொல்லித்தான் பணத்தை வாங்கினேன் என்று ஒப்பு கொண்டார். 

இதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் கலைவாணனை போலீசார் நேரில் சென்று பிடித்து கருத்துவாம்பாடி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 
பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தினால் கருத்துவாம்பாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்