ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை விழா

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் வருகிற 14-ந்தேதி நடக்கும் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை விழா வருகிற 6-ந்தேதி தொடங்குகிறது.

Update: 2022-03-24 18:35 GMT
நீடாமங்கலம்:
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் வருகிற 14-ந்தேதி நடக்கும் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை விழா வருகிற 6-ந்தேதி தொடங்குகிறது.
ஆபத்சகாயேஸ்வரர் கோவில்
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், திருஞானசம்மந்தரால் தேவாரப்பாடல் பெற்றது. நவக்கிரகங்களில் குருப்பகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியடையும் நாளில் இந்த கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். 
குருபகவான் அடுத்த மாதம் 14-ந்்தேதி (வியாழக்கிழமை) கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைவதையொட்டி இந்த கோவிலில்  குருபெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. 
குருபகவானுக்கு லட்சார்ச்சனை
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு குருபகவானுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல)் 6-ந்தேதி (புதன்கிழமை) முதல் 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை முதல்கட்ட லட்சார்ச்சனையும், குருப்பெயர்ச்சிக்கு பின்னர் 18-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை 2-ம்கட்ட லட்சார்ச்சனையும் நடைபெறும்.
மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ராசிக்காரர்கள் லட்சார்ச்சனையில் கலந்து கொண்டு பரிகாரம் செய்து கொள்ளலாம். லட்சார்ச்சனை கட்டணம் ரூ.400, லட்சார்ச்சனையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர் பிரசாதமாக வழங்கப்படும். லட்சார்ச்சனை காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும். 
கோவில் முகவரிக்கு...
லட்சார்ச்சனையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்களுடைய பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரம், லக்னம் ஆகிய முழு விவரங்களுடன் தொகையை உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர், ஆபத்சகாயேஸ்வரர் கோவில் என்ற பெயருக்கு பணவிடை, வரைவோலை எடுத்து கும்பகோணத்தில் மாற்றத்தக்க வகையிலோ அல்லது சிட்டி யூனியன் வங்கி ஆலங்குடி-612801 கிளையில் மாற்றத்தக்க வகையிலோ எடுத்து கோவில் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் அறநிலைய உதவி ஆணையர் ஹரிஹரன், அறநிலைய உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
சிறப்பு வழிபாடு
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் வியாழக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞாகணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று குருபகவானை வழிபட்டனர். இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் வியாழக்கிழமையையொட்டி குரு தெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. 

மேலும் செய்திகள்