வேலூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் பேரில் 165 நபர்களுக்கு காசநோய். கலெக்டர் தகவல்
வேலூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் பேரில் 165 நபர்களுக்கு காசநோய் இருப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.
வேலூர்
உலக காசநோய் தினத்தையொட்டி வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. வேலூர் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் கண்ணகி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காசநோய் துணைஇயக்குனர் ஜெயஸ்ரீ வரவேற்றார்.
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் கலெக்டர் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் காசநோய் ஒழிப்பு திட்டத்தை டாக்டர்கள் திறம்பட செயல்படுத்தி வருகிறார்கள். மாவட்டத்தில் ஒரு லட்சம் பேரில் 165 பேருக்கு காசநோய் உள்ளது. இதனை குறைப்பதற்கான வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். 2 வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருமல், சளி காணப்பட்டால் அவற்றை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உடனடியாக அருகே உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
பாதிப்பை ஒரு லட்சம் பேரில் 100-க்கும் குறைவான நபர்களுக்கு கொண்டு வர அனைவரும் பாடுபட வேண்டும் என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் காசநோய் ஒழிப்பு கையெழுத்து பிரசாரத்தை கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார்.