துணைத்தலைவர், கவுன்சிலர்கள் புறக்கணிப்பால் ஒன்றியக்குழு கூட்டம் ரத்து
துணைத்தலைவர், கவுன்சிலர்கள் புறக்கணிப்பால் ஒன்றியக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் உத்தமபாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தமபாளையம்:
ஒன்றியக்குழு கூட்டம்
உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுவில் 10 கவுன்சிலர்கள் உள்ளனர். அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேரும், தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேரும் இடம்பெற்றுள்ளனர். இதில் தலைவராக இருந்த அ.தி.மு.க. கவுன்சிலர் ஜான்சி வாஞ்சிநாதன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஒன்றியக்குழு தலைவராக துணைத்தலைவர் மூக்கம்மாள் கெப்புராஜ் (பொறுப்பு) வகித்து வந்தார்.
உத்தமபாளையம் ஒன்றிய பகுதியில் கடந்த 7 மாதங்களாக எவ்வித பணிகளும் நடைபெறாமல் இருக்கிறது என்று அனைத்து கவுன்சிலர்களும் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று ஒன்றியக்குழு கூட்டம் துணைத்தலைவர் தலைமையில் நடைபெறும் என்று அனைத்து கவுன்சிலர்களுக்கும் தபால் அனுப்பப்பட்டது.
வளர்ச்சி திட்ட பணிகள்
இதைத்தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து அதிகாரிகள் காத்திருந்தனர். 2 தி.மு.க. கவுன்சிலர்களும், 5 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மட்டும் ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர். ஆனால் அவர்கள் கூட்ட அரங்குக்கு செல்லவில்லை.
இதுகுறித்து ஒன்றிய கவுன்சிலர்களிடம் கேட்டபோது, ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் பொதுமக்களின் கோரிக்கைகளை எங்களால் நிறைவேற்ற முடியவில்லை. வளர்ச்சித் திட்ட பணிகளில் அதிகாரிகள்ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் காலியாக உள்ள தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த வேண்டும். ஒன்றிய கவுன்சிலர் வார்டுகளுக்கு திட்ட பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றனர்.
உத்தமபாளைய ஒன்றியக்குழு துணைத் தலைவர் உள்பட அனைத்து கவுன்சிலர்களும் புறக்கணிப்பால் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.