காரையூர் அருகே புதுப்பெண் அடித்துக்கொலை? உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
காரையூர் அருகே புதுப்பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியிலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரையூர்:
புதுப்பெண் கொலை?
காரையூர் அருகே உள்ள மேலத்தானியம் கள்ளர் தெருவை சேர்ந்த தட்சணாமூர்த்தியின் மகன் இளையராஜா (வயது 36). இவரது மனைவி மாரியம்மாள் (25). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. இந்நிலையில் இளையராஜாவுக்கும், வேறுறொரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், இன்று வீட்டில் உள்ள அறையில் மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் மாரியம்மாள் இறந்து கிடந்தார். இதையறிந்த பெண்ணின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தங்களது பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை, அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். காது, மூக்கு உள்ளிட்டவைகளில் ரத்தம், வந்துள்ளதால் அடித்துதான் கொலை செய்யப் பட்டதாக கூறி மேலத்தானி யம்- காரையூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
மேலும், கொலை செய்ததாக கூறி மாரியம்மாளின் கணவர் இளையராஜா மற்றும் அவரது அண்ணன் முருகேசன் மனைவி கமலா, இளையராஜாவின் தங்கை தவமணி ஆகிய 3 பேரையும் கைது செய்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவதாக கூறினர். இதையடுத்து அங்கு வந்த இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மணி அரசு மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இளையராஜாவை கைது செய்துவிட்டோம். மேலும் இருவரையும் கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மாரியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுப்பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.