ஆட்டோவில் பயணம் செய்பவர்களை குடும்பத்தில் ஒருவராக நினைக்க வேண்டும். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்

ஆட்டோவில் வரும் பயணிகளை உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து சேவை செய்ய வேண்டும் என்று வேலூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி கூறினார்.

Update: 2022-03-24 18:16 GMT
வேலூர்

ஆட்டோவில் வரும் பயணிகளை உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து சேவை செய்ய வேண்டும் என்று வேலூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி கூறினார்.

ஆலோசனை கூட்டம்

வேலூர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் டாக்டர், ஆண் நண்பருடன் காட்பாடி தியேட்டரில் இரவு சினிமா பார்த்துவிட்டு ஆட்டோவில் திரும்பியபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். 
இதுதொடர்பாக 17 வயது சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இயங்கும் ஆட்டோக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் மற்றும் பயணிகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்  நடந்தது. துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி தலைமை தாங்கி பேசியதாவது:-

குடும்பத்தில் ஒருவராக...

வேலூர் மாநகர பகுதியில் இரவு நேரங்களில் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து வேலூர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. நகரப்பகுதியில் 24 மணி நேரமும் ஆட்டோக்கள் ஓடுகிறது. எனவே இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டக்கூடிய டிரைவர்கள் தங்களுடைய முகவரி, புகைப்படம், செல்போன் எண் உள்ளிட்டவற்றை சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். 

மேலும் ஆட்டோக்களில் செல்போன் எண், போட்டோவுடன் கூடிய முகவரி, உரிமையாளர் பெயர் உள்ளிட்டவை பயணிகளுக்கு தெரியும் வகையில் வைத்திருக்க வேண்டும்.
உங்கள் ஆட்டோவில் வரும் பயணிகளை உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து சேவை செய்ய வேண்டும். மக்கள் ஆட்டோ டிரைவர்களை தான் முழுமையாக நம்பி இருக்கின்றனர். நீங்களும் பொதுமக்களின் காவலர்கள்தான். பெரும்பாலானோர் முகவரி கூட உங்களை பார்த்து தான் கேட்கிறார்கள். அப்படிப்பட்ட நம்பிக்கையை வீணடித்து விடாதீர்கள். 

ஒரு சில ஆட்டோ டிரைவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் குறித்த விவரங்களை ரகசியமாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். போலீசார் தெரிவிக்கும் கட்டுப்பாடுகளை மீறும் ஆட்டோ டிரைவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, ஆட்டோ பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், நந்தகுமார், நாகராஜன், மோட்டார் வாகன ஆய்வாளர் கருணாநிதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்