மேகமலை வனப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரம்

மேகமலை வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுப்பதற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2022-03-24 18:05 GMT
கடமலைக்குண்டு: 

தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு ஆகிய வனச்சரக பகுதிகளை ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பமாக கடந்த ஆண்டு அரசு அறிவித்தது. இதையடுத்து வனப்பகுதிக்குள் புலிகள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி முதற்கட்டமாக மேகமலை வனச்சரக பகுதிகளில் புலிகள் நடமாட்டம் கண்டறியப்பட்ட 66 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடங்களில் 2 சதுர கிலோ மீட்டர் தூர இடைவெளியில் 2 கண்காணிப்பு கேமராக்கள் வீதம் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்த பணிகள் குறித்து மேகமலை வனச்சரகர் சதீஷ்கண்ணன் கூறுகையில், ஒரே இடத்தில் எதிர், எதிர் திசை நோக்கி 2 கேமராக்களை மரத்தில் பொருத்தி வைக்கப்பட்டு வருகிறது. கேமராக்களுக்கு இடையே சென்சார் இணைப்பு இருக்கும். எனவே எந்த விலங்கு குறுக்கிட்டாலும் அதனை கேமராக்கள் துல்லியமாக புகைப்படம் எடுக்கும். புலிகள் நடமாட்டம், கால்நடைகள் மேய்ச்சல், மனித இடையூறு போன்றவை கண்டறியப்படும். கேமராக்கள் முழுமையாக பொருத்தப்பட்டு ஒரு மாதத்திற்கு பின்னர், புலிகள் எண்ணிக்கை குறித்து கணக்கிடப்படும், என்றார்.

மேலும் செய்திகள்