இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கு:ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைப்பு
22 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்ட நிலையில் வழக்கு ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு வினோதினியிடம் ஒப்படைக்கப்பட்டன.
விருதுநகர்,
22 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்ட நிலையில் வழக்கு ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு வினோதினியிடம் ஒப்படைக்கப்பட்டன.
பாலியல் பலாத்கார வழக்கு
விருதுநகரை சேர்ந்த 22 வயது பட்டியலின இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக 2 தி.மு.க. நிர்வாகிகள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி நியமிக்கப்பட்டதுடன் 60 நாட்களுக்குள் இந்த வழக்கு விசாரணையை முடித்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
ஒப்படைப்பு
இந்நிலையில் நேற்று விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை, மதுரை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு வினோதினியிடம் ஒப்படைத்தார்.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் முதல்கட்டமாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன், மாடசாமி, ஜீனத் அகமது மற்றும் பிரவீன் ஆகிய 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களையும் ஆய்வு செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி நேரடி விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.