திருவட்டார் ஊரக வளர்ச்சி வங்கியில் நகை கடன் தள்ளுபடி பயனாளிகள் முற்றுகை

திருவட்டார் தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் நகைக் கடன் தள்ளுபடிக்காக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் வங்கியை நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டத

Update: 2022-03-24 17:59 GMT
குலசேகரம், 
திருவட்டார் தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் நகைக் கடன் தள்ளுபடிக்காக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் வங்கியை நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நகை கடன் தள்ளுபடி
குலசேகரம் சந்தை சந்திப்பில் திருவட்டார் தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி உள்ளது. இந்த வங்கியில் நகை கடன் தள்ளுபடி பயனாளிகளாக 639 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கடந்த 19-ந் தேதி முதல் நகைகள் திருப்பிக் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக வங்கியில் தலைவராக இருக்கும் ஜெயசந்திரனுக்கும், செயலாளராக இருக்கும் எட்வின் பால்ராஜூக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வங்கித் தலைவர் ஜெயசந்திரன் திடீரென்று வங்கி செயலாளர் எட்வின் பால்ராஜ் மற்றும் மேற்பார்வையாளர் தங்கலீலா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அவர்கள் தங்களது பொறுப்புகளை வங்கியில் பணிபுரியும் 2 பேரிடம் ஒப்படைக்க வேண்டும் அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். 
முற்றுகை
ஆனால், புதிய நபர்கள் பொறுப்புகளை ஏற்க முன்வரவில்லை. இதைத் தொடர்ந்து நேற்று இந்த வங்கிக்கு நகை தள்ளுபடி பயனாளிகள் வந்த போது அவர்களுக்கு நகைகளை திரும்ப கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பயனாளிகள் வங்கியை முற்றுகையிட்டனர். 
தகவல் அறிந்த குலசேகரம் பேரூராட்சித் தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ் மற்றும் துணைத் தலைவர் ஜோஸ் எட்வர்ட் ஆகியோர் வங்கிக்கு வந்து வங்கி தலைவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 
இது தொடர்பான தகவல்கள் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்திற்கும் சென்றன. இந்தநிலையில் பிற்பகல் 2 மணிக்கு வங்கிச் செயலாளர் எட்வின் பால்ராஜ் மற்றும் தங்கலீலா ஆகியோர் மீதான பணியிடை நீக்க நடவடிக்கையை தலைவரின் உத்தரவுபடி துணைத் தலைவர் விஜய பத்ம குமாரி ரத்து செய்தார். அத்துடன் பயனாளிகளுக்கு தள்ளுபடி நகைகள் திருப்பி கொடுக்கும் பணிகள் தொடங்கின. இதையடுத்து வங்கியில் பயனாளிகள் சுமார் 5 மணி நேரமாக நடத்திய முற்றுகை போராட்டம் முடிவிற்கு வந்தது. இந்த சம்பவத்தால் வங்கியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்