போதை பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாக கூடாது சுதந்திர தின அமுதப்பெருவிழாவில் கலெக்டர் பேச்சு

போதை பழக்கங்களுக்கு மாணவர்கள் அடிமையாக கூடாது என நாகர்கோவிலில் நடந்த சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் கலெக்டர் அரவிந்த் பேசினார்.

Update: 2022-03-24 17:52 GMT
நாகர்கோவில், 
போதை பழக்கங்களுக்கு மாணவர்கள் அடிமையாக கூடாது என நாகர்கோவிலில் நடந்த சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் கலெக்டர் அரவிந்த் பேசினார்.
சுதந்திர தின அமுதப்பெருவிழா
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போரடிய தியாகிகளின் வரலாற்றையும், அவர்களை நினைவு கூறும் வகையில் 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழா நிகழ்ச்சி குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி. பள்ளியில் நேற்று தொடங்கி, 7 நாட்கள் நடக்கிறது.
தொடக்க விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். செய்தி மக்கள் தொடர்பு அதிகாாி ஜாண்பிரைட் அனைவரையும் வரவேற்று பேசினார்.
போதைக்கு அடிமையாக கூடாது
 நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் பேசியதாவது:-
போதை பொருள் நடமாட்டம் இல்லாத மாவட்டமாக கன்னியாகுமரி திகழ மாணவர்கள் ஆகிய நீங்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். எக்காரணம் கொண்டும் போதை பொருட்களுக்கு மாணவர்கள் அடிமையாகிவிடக் கூடாது. இதனால், தங்களது வாழ்கை மட்டுமின்றி தங்களை சார்ந்தவர்களின் வாழ்கையும் சீரழிந்துவிடும்.
முறையான உடற்பயிற்சி, படிப்பில் ஆர்வம், அதிகமாக புத்தகங்கள் வசிப்பது, நல்ல நண்பர்களின் பழக்கவழக்கங்கள் நம்மை சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு நிச்சயம் கொண்டு செல்லும். பிளாஸ்டிக் பயன்பாட்டை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்கவும், வருங்கால சங்கதிகளை காத்திடவும் வீடுகளில் மழைநீர் தொட்டி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாணவர்களின் பங்களிப்பு முக்கியம்
தொடர்ந்து மாநகராட்சி மேயர் மகேஷ் பேசியதாவது:-
நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள் மாணவ, மாணவிகள் ஆகும். அதேபோல் நான் நாகர்கோவில் மாநகராட்சியை மேம்படுத்த பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டுவர இருக்கிறேன். இதற்கு மாணவர்களாகிய உங்களது பங்களிப்பு மிக முக்கியமாகும். மாணவர்கள் தங்களது கல்வி ஒன்றை குறிகோளாக வைத்து பல்வேறு துறைகளில் சாதனைகளை படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.  
முன்னதாக நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்களை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள்  பார்வையிட்டனர். மேலும் தோட்டக்கலைத்துறை, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் சுயஉதவிக்குழு உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில் வைக்கப்பட்ட படைப்புகளையும் மாணவர்கள் பார்வையிட்டனர்.
கலை நிகழ்ச்சி
இதனைதொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், சிலம்பம் போன்றவை நடந்தது. நிகழ்ச்சியில் நாகர்கோவில் ஆணையர் ஆஷா அஜித், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி உள்பட அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்