மனிதாபிமான அடிப்படையில் மண்டபம் முகாமில் இலங்கை அகதிகள் தங்க வைப்பு

இலங்கையில் இருந்து அகதிகள் வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளை அயலக தமிழர் நலன், மறுவாழ்வு துறை ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-03-24 17:46 GMT
பனைக்குளம், 
இலங்கையில் இருந்து அகதிகள் வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளை அயலக தமிழர் நலன், மறுவாழ்வு துறை ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக் கடியால் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் பல மடங்கு விலை உயர்ந்து ஏராளமான மக்கள் தமிழகம் நோக்கி வர இருப்பதாக தகவல் வந்துள்ளது. 
இதனிடையே நேற்று முன்தினம் 2 படகுகளில் 16 பேர் அகதிகளாக வந்துள்ளனர். மேலும் இன்னும் அகதிகள் அதிகமாக வரலாம் என்றும் உளவுத்துறை மூலம் தகவல் வந்துள்ளது.
10 அகதிகள்
இந்த நிலையில் மண்டபம் அகதிகள் முகாமில் ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து நேற்று அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையாளர் ஜெசிந்தா லாசரஸ் மண்டபம் அகதிகள் முகாம் வருகை தந்தார்.  இவர் இலங்கையில் இருந்து வருகை தந்து அகதியாக தங்க வைக்கப்பட்டுள்ள 2 குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் உள்ளிட்ட 10 அகதிகளையும் நேரில் பார்த்து இலங்கையில் உள்ள நிலைமை குறித்து  கேட்டறிந்தார்.
தொடர்ந்து அகதிகள் முகாமில் உள்ள மற்ற இடங்களையும் ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் சங்கர் லால் குமாவத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு் கார்த்திக் உள்ளிட்ட அதிகாரிகள் பலர்உடனிருந்தனர். ஆய்வுக்குப் பின்னர் முகாம் வாசலில் மறுவாழ்வுத் துறை ஆணையர் நிருபர்களிடம் கூறியதாவது:- இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகள் வர தொடங்கியுள்ளது குறித்து தமிழக அரசு மூலம் மத்திய அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு மூலம் இதுகுறித்த உத்தரவு வந்த பின்னர் அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முகாமில் தங்க வைப்பு
 சட்டசபையில் தமிழக முதல்-அமைச்சரால் அறிவிக்கப் பட்ட இலங்கை தமிழர் களுக்கான 12 திட்டங்களில் தமிழக முகாம்களில் 8 திட்டம் தற்போதும் நடைமுறையில் இருந்து வருகிறது. புதிதாக வீடுகள் கட்டுவது உள்ளிட்ட இன்னும் சில திட்டங்களை செயல்படுத்து வதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, இலங்கையில் இருந்து ராமேசுவரத்திற்கு இதுவரை 16 பேர் அகதிகளாக வந்துள்ளனர். இதில் 6 பேர் சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைப்பதற்காக கொண்டு செல்லப் பட்டனர். அதேநேரம் அரசானது மனிதாபிமான அடிப் படையில் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக வந்துள்ள தமிழர்களை சிறையில் அடைக்க வேண்டாம் என தெரிவித்து உள்ளதால் 2 குடும்பத்தைச் சேர்ந்த 10 அகதிகள் முகாமில் வீடுகளில் மனிதாபிமான அடிப்படையில் தங்கவைக்கப் பட்டு உள்ளனர். 
உத்தரவு
சென்னை புழல் சிறையில் அடைப்பதற்காக கொண்டுசெல்லப்பட்ட மீதம் உள்ள 6 அகதிகள் முகாமில் தங்க வைப்பதற்காக அழைத்துவரப் படுகிறார்கள். அவர் களும் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள். இலங்கையில் இருந்து தற்போது வந்தவர்களையும், இனி வருபவர்களையும் அகதிகளாக பதிவு செய்வது குறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரையிலும் அரசால் உத்தரவு ஆணை வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்