பொதுமக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் தர்மபுரியில் முத்தரசன் பேட்டி
பொதுமக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தர்மபுரியில் கூறினார்.;
தர்மபுரி:
பொதுமக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தர்மபுரியில் கூறினார்.
விலைவாசி உயர்வு
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தர்மபுரி மாவட்ட நிர்வாக குழு மற்றும் மாவட்ட குழு கூட்டம் தர்மபுரியில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
5 மாநில தேர்தல் முடிந்த உடன் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதேபோல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். இந்த விலைவாசி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு வர தொடங்கி உள்ளனர். இவ்வாறு வருபவர்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர் நலவாரிய அதிகாரிகள் மத்திய அரசின் சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பான திட்டங்களை தீட்டி வருகிறார்கள். இது முதல்- அமைச்சருக்கு தெரியாமல் நடப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது. எனவே இந்த விஷயத்தில் முதல்- அமைச்சர் தலையிட்டு தொழிலாளர்களை பாதிக்கும் சட்டங்களை அமல்படுத்துவதை தடுக்க வேண்டும்.
நிதி குறைப்பு
மத்திய அரசு தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்திற்கான நிதியை படிப்படியாக குறைத்து வருகிறது. இந்த திட்டத்தில் வேலை நாட்களை ஆண்டுக்கு 200 ஆக அதிகரிக்க வேண்டும். இந்த திட்டத்தை விவசாயத்தோடு இணைக்க வேண்டும். தற்போது விவசாயத்தில் எந்திரங்கள் பயன்பாடு வந்துவிட்டது.
ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு எந்திர பயன்பாடு குறித்து பயிற்சி வழங்கி அவர்களுக்கு எந்திரங்களை மானியத்தில் வழங்க வேண்டும். உக்ரைனில் படித்து போர் காரணமாக இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு இங்கேயே கல்வி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும்.
நடுநிலையுடன்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்ட மேற்கொள்ளும் முயற்சி இரு மாநில மக்களின் நல்லுறவை பாதிக்கும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சம் இன்றி நடுநிலையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து நடந்த கட்சியின் மாவட்ட குழு கூட்டத்தில் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பழனிசாமி, நஞ்சப்பன், மாவட்ட செயலாளர் தேவராசன், மாவட்ட துணை செயலாளர் தமிழ்க்குமரன், மாவட்ட பொருளாளர் மாதேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.