பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல் தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு
பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல் தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே சவுளூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 42). பாகலஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர். இந்த நிலையில் முருகனுக்கும், நார்த்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த அதியமான் (45) என்பவருக்கும் ஏலச்சீட்டு நடத்திய விவகாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் முருகன் நார்த்தம்பட்டி கிராமத்திற்கு சென்று அதியமானிடம் பணம் கேட்டபோது இருவருக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு அடிதடியாக மாறியது. பின்னர் நார்த்தம்பட்டியை சேர்ந்த ஒரு பெண் உள்பட 3 பேர் சேர்ந்து பாகலஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகனை தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு தற்போது தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் அதியமான் (45), அவரது மனைவி பரிமளா (38), உறவினர் சாமிநாதன் (42) ஆகியோர் மீது அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.