தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2022-03-24 17:05 GMT
நடவடிக்கை எடுக்கப்படுமா?
குலசேகரம், செருதி கோணத்தில் சிற்றாறு  பட்டணங்கால்வாயின் குறுக்கே பாலம் உள்ளது. மிக பழமையான இந்தப்பாலம் பராமரிக்கப்படாததால், பாலத்தின் ஓரத்தில் உள்ள தடுப்பு சுவர் உடைந்து கம்பிகள் இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே பெரிய விபத்து நடப்பதற்கு முன் தடுப்புகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஏஞ்சல் ஜெனி, குலசேகரம்.
சுகாதார சீர்கேடு
நாகர்கோவில் 42-வது வார்டு வேதநகரின் சாலையோரங்களில் உள்ள கழிவுநீர் ஓடையில் இருந்து மண் அகற்றி அந்த ஓடையின் அருகிலேயே வைக்கப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கழிவு மண்ணில் ஏறி செல்லும் போது, அந்த மண் மீண்டும் கழிவுநீர் ஓடையிலேயே விழுகிறது. மேலும் அந்த சாலை முழுவதும் மண்ணில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே ஓடையில் இருந்து அகற்றப்படும் கழிவு மண்ணை உடனே அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆன்றோ டெகோ சிங் ராஜன், வேதநகர்.
சாலைப்பணி தொடருமா?
பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட குறும்பனையில் இருந்து ஆலஞ்சி பரவிளை வழியாக கடலோரத்தை ஒட்டி மிடாலம் நடுத்துறைக்கு இணைப்புச்சாலை உள்ளது. 
இந்த சாலை வழியாக குறும்பனையில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் மிடாலம் செல்ல முடியும். இதற்காக குறும்பனை-மிடாலம் நடுத்துறை இடையேயான இணைப்புச்சாலை பணி நடந்து வந்தது. அது ஆலஞ்சி-பாரியக்கல் பகுதியில் தற்போது பாதியில் நிற்கிறது. இதனால் மக்கள் 4 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டியது உள்ளது. எனவே சாலைப்பணியை தொடர்ந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அலெக்சாண்டர், ஆர்.சி தெரு, கருங்கல்.
பழைய கட்டிடம் அகற்றப்படுமா?
திருவட்டார் பஸ் நிலையத்தில் திருவட்டார் பேரூராட்சிக்கு சொந்தமான 60 ஆண்டுகள் பழமையான கட்டிடம் உள்ளது. இதில் டைம் கீப்பர் அலுவலகம், ஓய்வறை மற்றும் சில கடைகள் உள்ளன. கட்டிடத்தின் மேல் கூரை பல இடங்களில் சேதமடைந்து உள்ளது. மேலும் பஸ்சுக்காக பயணிகள் நிற்கும் போதும் காங்கிரீட் பெயர்ந்து விழுகிறது. எனவே திருவட்டார் பேரூராட்சி நிர்வாகம் பழைய கட்டிடத்தை அகற்றி, பேரூராட்சிக்கு வருவாய் வரும் வகையில் இங்கு புதிய வணிக வளாகம் கட்ட முன்வர வேண்டும்.  
-கே. சுகுமாரன், திருவட்டார்
தலைகீழாக தொங்கும் தெருவிளக்கு
அருமனை பேரூராட்சியில் பெரும்பாலான இடங்களில் தெருவிளக்கு எரிவதில்லை. இதனால் முக்கிய தெருக்கள் மற்றும் குக்கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளது. தெருவிளக்குகள் பராமரிப்பு இன்றி பழுதடைந்த நிலையிலேயே உள்ளது. அருமனை பேரூராட்சியில் படப்பச்சை பகுதியில் பல மின்கம்பங்களில் தெரு விளக்குகள் தலைகீழாக தொங்குவதை காண முடிகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரசாத், படப்பச்சை.

மேலும் செய்திகள்