மக்கள் பயன்படுத்தாத வண்ணான்குளம் மேம்பாட்டிற்கு ரூ.1½ கோடி நிதி ஒதுக்கீடு தேவையா
மயிலாடுதுறை நகரில் 80 குளங்கள் இருக்கும்ேபாது மக்கள் பயன்படுத்தாத வண்ணான்குளம் மேம்பாட்டிற்கு ரூ.1½ கோடி நிதி ஒதுக்கீடு தேவையா? என்று நகரசபை கூட்டத்தில் உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை நகரில் 80 குளங்கள் இருக்கும்பாது மக்கள் பயன்படுத்தாத வண்ணான்குளம் மேம்பாட்டிற்கு ரூ.1½ கோடி நிதி ஒதுக்கீடு தேவையா? என்று நகரசபை கூட்டத்தில் உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
நகரசபை கூட்டம்
மயிலாடுதுறை நகரசபை அவசர கூட்டம் தலைவர் குண்டாமணி என்கிற செல்வராஜ் தலைமையில் நடந்தது. ஆணையர் பாலு முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதன் விவரம் வருமாறு:
கணேசன்(ம.தி.மு.க.):- 2-வது வார்டில் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. நகராட்சி மின்மயானத்தில் எந்தவித ரசீதும் இல்லாமல் ரூ.3 ஆயிரத்து 500 வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயன்படுத்தாத குளத்திற்கு ரூ.1½ கோடி நிதி
மயிலாடுதுறை நகரில் உள்ள வண்ணான்குளத்தை மேம்படுத்த ரூ.1½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகரில் 80 குளங்கள் இருக்கும் போது பொதுமக்கள் பயன்படுத்தாத வண்ணான் குளத்திற்கு மட்டும் இவ்வளவு தொகை தேவையா?
ஆணையர்:- நகரம் முழுவதும் பாதாள சாக்கடை பிரச்சினை உள்ளது. மேலும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் ஆறுபாதி வாய்க்காலில் விடப்படுவதால் அந்த பகுதி மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நகராட்சி ரூ.25 கோடி கடனில் உள்ளதால் பாதாள சாக்கடை சீரமைப்பு பணியை மேற்கொள்ள முடியவில்லை. ஆகையால் பாதாள சாக்கடையை முழுமையாக சீரமைக்க ரூ.81 கோடிக்கு வரைவு அறிக்கையை அரசு தயாரித்துள்ளது.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு வண்ணான் குளம், சேந்தங்குடி குளம் ஆகிய குளங்களை மேம்படுத்த ரூ.2½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மணிமேகலை(தி.மு.க.):- 7-வது வார்டில் அனைத்து தெருக்களிலும் பாதாள சாக்கடை மூடி உடைந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது.
பொது கழிப்பறை
ராஜலட்சுமி(தி.மு.க.):- திருமஞ்சன வீதி ஆற்றங்கரை தெருவில் வசிக்கும் பொதுமக்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவல நிலை உள்ளது. எனவே அந்த பகுதியில் பொது கழிப்பறை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.ஜி.சம்பத்(தி.மு.க.):- கிட்டப்பா பாலம் காவிரி ஆற்றங்கரையில் இருந்த பழமையான கருமாதி மண்டபம் இடிக்கப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட வார்டு மக்கள் பயன்பெறும் இந்த பகுதியில் கருமாதி மண்டபம் இல்லாததால் சாலையில் அமர்ந்து சடங்குகள் செய்யும் அவலநிலை உள்ளது. எனவே உடனடியாக கருமாதி மண்டபம் கட்டித் தரவேண்டும்.
ரத்தினவேலு(தி.மு.க.):- எடத்தெரு, திருமஞ்சன வீதி சந்திப்பில் பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டி மூடி உடைந்து கழிவுநீர் வெளியேறுகிறது. அந்த ஆழ்நுைழவு தொட்டிகளில் மழை நீரும் உள்ளே சென்று விடுகிறது. இந்த கழிவுநீர் அருகிலுள்ள குளத்திற்கு சென்று விட்டது. அதனால் குளம் முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்
உஷாராணி(தி.மு.க.):- எனது வார்டில் இருந்து எடுத்து செல்லும் குப்பைகள் மற்றொரு பகுதியில் கொட்டப்படுகின்றன. மேலும் நகரில் உள்ள திருமண மண்டபங்களில் இருந்து கொண்டுவரப்படும் இலை மற்றும் கழிவுகள் அனைத்தும் பழைய தரங்கம்பாடி ெரயில்வே பாதையில் கொட்டப்படுகின்றன. இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
சதீஷ்குமார்(அ.தி.மு.க.):- ஏற்கனவே தரங்கம்பாடி சாலையில் மூடப்பட்ட மகப்பேறு ஆஸ்பத்திரி முன்பு கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். அந்த மகப்பேறு அரசு ஆஸ்பத்திரியை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மன்னர்மன்னன்(நகர்நல அலுவலர்):- ஏற்கனவே மயிலாடுதுறை கூறைநாட்டில் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. கூடுதலாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கேட்டு மத்திய அரசுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அந்த பகுதியில் மகப்பேறு ஆஸ்பத்திரி அமைக்கப்படும்.
புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி
விஜயலட்சுமி(தி.மு.க.):- கோவில் இடங்களில் வசிப்போருக்கு வரி விதிப்பு ரசீது வழங்க வேண்டும். இந்த வீட்டு வரி ரசீது கொண்டு குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு பெற வசதியாக இருக்கும்.
ஆணையர்:- கோவில்களில் இருந்து தடையில்லா சான்று இல்லாமல் வரிவிதிப்பு சான்று வழங்க இயலாது.
நடராஜன்(தி.மு.க.):- மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கனவான புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி எந்த நிலையில் உள்ளது? ஆணையர்:- மயிலாடுதுறை நகருக்கு ரூ.45 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. அதில் ரூ.19 கோடி அரசு மானியம் வழங்குகிறது. மீத தொகை கடனாக பெற வேண்டும். புதிய பஸ் நிலையம் கட்ட மணக்குடி கிராமத்தில் வாங்கப்பட்ட நிலம் இதுவரை நகராட்சி பெயருக்கு மாற்றப்படவில்லை. மேலும் அந்த இடம் ஊராட்சி பகுதியில் இருப்பதால் பஸ் நிலையத்திற்கு உரிய வரி ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே பஸ் நிலையம் அமைய உள்ள இடம் நகராட்சி எல்லைக்குள் கொண்டு வர வேண்டும். பஸ் நிலையத்திற்காக வாங்கப்பட்ட இடம் நகராட்சி பெயருக்கு மாற்றப்பட வேண்டும். இந்த 2 பணிகளும் நிறைவடைந்த பின்னர்தான் புதிய பஸ் நிலையம் அமைக்கும்பணி தொடங்க முடியும்.
இவ்வாறு விவாதம் நடந்தது. முடிவில் நகரசபை துணை தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார். கூட்டத்தில் நகராட்சி அலுவலர்கள், நகரசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.