ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் வாடகை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் ஆணையாளர் உறுதி

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் வாடகை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று ஆணையாளர் உறுதியளித்தார்.

Update: 2022-03-24 16:50 GMT
ஊட்டி

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் வாடகை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று ஆணையாளர் உறுதியளித்தார். 

நகர்மன்ற கூட்டம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற கூட்டரங்கில்  நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் வாணீஸ்வரி தலைமை தாங்கினார். 

துணைத்தலைவர் ரவிக்குமார், ஆணையாளர் காந்திராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கடந்த 2016-ம் ஆண்டு வாடகை மறுநிர்ணயம் செய்து உயர்த்தப்பட்டது. 

பல கடைகள் சீல் வைக்கப்பட்டன. மேலும் 96 கடைகள் ஏலம் விடப்படாததால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே வாடகையை குறைத்து மறு நிர்ணயம் செய்ய வேண்டும், தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அதை கட்டுப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். 

இதற்கு பதிலளித்து ஆணையாளர் காந்திராஜ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 

கட்டிடம் கட்டியதில் முறைகேடு

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் வாடகை பிரச்சினைக்கு தீர்வு காணப் படும். பார்சன்ஸ்வேலி 3-வது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தண்ணீர் சரிவர வினியோகம் செய்யப்படாத பகுதிகளை கண்டறிந்து வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

கட்டிட அனுமதி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு ஏற்ப சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஊட்டியில் கழிப்பிடங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

சுற்றுலாப் பயணிகளுக்காக குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் சீரமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். 

கூட்டத்தில் 86 தீர்மானங்கள் விவாதிக்கப் பட்டு நிறைவேற்றப்பட்டது. இதில் நகராட்சி பொறியாளர் இளங்கோவன், வருவாய் அலுவலர் பிரான்சிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்