விஷம் குடித்து முதியவர் தற்கொலை முயற்சி
அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில், விஷம் குடித்து முதியவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.;
கொடைரோடு:
கொடைரோடு அருகே உள்ள பள்ளப்பட்டி கோபால்புரத்தை சேர்ந்தவர் அழகுமலை (வயது 70). கூலித்தொழிலாளி. பள்ளப்பட்டியை சேர்ந்தவர் நாச்சியப்பன் (வயது 40). இவர்கள் 2 பேரும் பள்ளப்பட்டி சிறுமலை அடிவாரத்தில் உள்ள ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரது தோட்டத்தில் வேலை செய்தனர்.
அப்போது அழகுமலைக்கும், நாச்சியப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் பள்ளப்பட்டி சிப்காட் பகுதியில் நடந்து வந்த அழகுமலையை, நாச்சியப்பன், பொட்டிசெட்டிபட்டியை சேர்ந்த அவருடைய நண்பர் சின்னக்கருப்பன் ஆகியோர் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த அழகுமலை, அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்க சென்றார். அப்போது அங்கிருந்த போலீசாரிடம், மருத்துவமனையில் சேருவதற்கு கடிதம் கேட்டார்.
ஆனால் போலீசார் காலதாமதம் செய்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த அவர், தான் வைத்திருந்த விஷத்தை போலீஸ் நிலைய வாசலில் வைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனையடுத்து அவரிடம் இருந்து விஷ பாட்டிலை போலீசார் பிடுங்கினர். பின்னர் அவர், சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அழகுமலை கொடுத்த புகாரின் பேரில் நாச்சியப்பன், சின்னக்கருப்பன் ஆகியோர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.