புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட எதிர்ப்பு; கிராம மக்கள் சாலை மறியல்
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வில்லியனூர், மார்ச்.24-
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நான்குவழிச்சாலை பணி
விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள வீடுகள், கடைகள் அகற்றப்பட்டு, சாலை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஆங்காங்கே சாலை சந்திப்புகளில் மேம்பாலங்கள் அமைக்கும் பணியும் மும்முரமாக நடக்கிறது.
அந்தவகையில் வில்லியனூர் அருகே உள்ள அரியூர் பகுதியில் விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 3 மாதமாக நடைபெற்று வருகிறது.
இந்த பாலம் அமைவதால் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை உள்ளது. எனவே பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
சாலைமறியல்
இந்தநிலையில் அரியூர், அனந்தபுரம், பங்கூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை திடீரென்று அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருமார்க்கத்திலும் வாகனங்கள் நீண்ட தூரம் அணி வகுத்து நின்றன.
இதுபற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், அரியூர், அனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி 40-க்கும் மேற்பட்ட புதுச்சேரி- தமிழக கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவ, மாணவிகள் தினந்தோறும் வேலை, பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.
பாலம் அமைப்பதால் இப்பகுதிகளை சேர்ந்தவர்கள் அவசர தேவைக்கு 3 கிலோ மீட்டர் சுற்றி செல்லவேண்டும். எனவே கிராம மக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் சர்வீஸ் சாலை அமைத்து தரவேண்டும், இல்லையென்றால் மேம்பாலம் கட்டும் பணியை கைவிட வேண்டும் என்றனர்.
அமைச்சர் பேச்சுவார்த்தை
மறியல் போராட்டம் பற்றி தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ.வும், வேளாண்துறை அமைச்சருமான தேனீ.ஜெயக்குமார் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நபர் களிடம் தொலைபேசியில் பேசினார். தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக முதல்-அமைச்சரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.