மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மீதான வழக்குகள் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மீதான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.;

Update: 2022-03-24 14:57 GMT
கோப்பு படம்
மும்பை,
மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மீதான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
மந்திரி ராஜினாமா
பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டு அருகே கடந்த ஆண்டு வெடிகுண்டு கார் சிக்கிய வழக்கை தவறாக கையாண்ட விவகாரத்தில், அப்போது மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் அப்போதைய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். மும்பை போலீசாரை மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தரும்படி அனில் தேஷ்முக் கட்டாயப்படுத்தியதாக தெரிவித்தார். 
அனில் தேஷ்முக் மீதான இந்த குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதால், அவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 
பரம்பீர் சிங் மீது வழக்குகள் 
இந்த நிலையில் பரம்பீர் சிங் மீது மிரட்டி பணம் பறிப்பு, ஊழல், பணி நடத்தை மீறல் போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டார். 
தனது மீதான வழக்குகள், பணி இடைநீக்கம் ஆகியவற்றை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் பரம்பீர் சிங் மனு தாக்கல் செய்தார். 
மந்திரி பதவி வகித்த அனில் தேஷ்முக் மீது மாமூல் குற்றச்சாட்டை தெரிவித்ததால், தன் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் மனுவில் தெரிவித்து இருந்தார். ஆனால் அந்த மனுக்களை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. 
சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம்
இதையடுத்து பரம்பீர் சிங் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.கே. கவுல், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்தனர். இன்றைய விசாரணையின்போது, பரம்பீர் சிங் மீதான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டனர். 
சி.பி.ஐ. பாரபட்சமின்றி விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும், சி.பி.ஐ.க்கு மராட்டிய போலீசார் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். பரம்பீர் சிங் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற மராட்டிய அரசின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். 
அதேநேரத்தில் பரம்பீர் சிங்கின் பணி இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மறுத்து விட்டனர். 
பரம்பீர் சிங் மீதான அனைத்து வழக்குகளும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு இருப்பது, மராட்டிய அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. 
 

மேலும் செய்திகள்