கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடியுங்கள்

கொேரானா பரவல் குறைந்ததால் அலட்சியத்துடன் இருக்காமல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு மருத்துவ துணை இயக்குனர் கூறினார்.;

Update: 2022-03-24 13:50 GMT
வால்பாறை

கொேரானா பரவல் குறைந்ததால் அலட்சியத்துடன் இருக்காமல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு மருத்துவ துணை இயக்குனர் கூறினார். 

மருத்துவ துணை இயக்குனர் ஆய்வு

வால்பாறை பகுதியில் உள்ள வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தாய்சேய் சிகிச்சை மையம், முடீஸ், சோலையாறு நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவை மாவட்ட மருத்துவ துணை இயக்குனர் டாக்டர் அருணா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிநோயாளிகள் பிரிவின் செயல்பாடுகள், தாய்சேய் மையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மாதாந்திர பரிசோதனை அட்டவணை முறையில் நடைபெறுகிறதா, ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பிரசவங்கள் நடைபெறுகிறது முன் பிரசவகால சிகிச்சை பின் பிரசவகால சிகிச்சை வழங்கப்படுவதை ஆய்வு செய்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை

வால்பாறை பகுதியில் இதுவரை 25 மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்ற நிலையில் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த மருத்துவ பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். கொரோனா பரவல் குறைந்ததால் பொதுமக்கள் அலட்சியத்துடன் இருக்கக்கூடாது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.
காடம்பாறை வனப் பகுதிக்குள் அமைந்திருக்கும் வெள்ளிமுடி மலைவாழ் கிராமத்திற்கு நேரில் சென்று கிராம சுகாதார செவிலியர்கள் டாக்டர்கள் வருகிறார்களா இல்லம் தேடி மருத்துவ பணியாளர்கள், ஆஷா மருத்துவ உதவியாளர்கள் வருகிறார்களா வயதான நோயாளிகளை தொடர்ந்து வந்து கண்காணிக்கின்றார்களா, 2 தவனை கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளார்களா என்பதையும் ஆய்வு செய்தார்.

கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை

மலைவாழ் கிராம மக்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும். கர்ப்பிணி தாய்மார்களை பிரசவ காலத்தில் முன்கூட்டியே அரசு ஆரம்ப நிலையத்தில் உள்ள தாய் சேய் மையத்திற்கு அழைத்து வந்து உரிய சிகிச்சை வழங்கி தாயையும் குழந்தையையும் பாதுகாக்க வேண்டும் என்று துணை இயக்குனர் டாக்டர் அருணா உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் வட்டார மருத்துவர் பாபுலட்சுமண் பலர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்