குளமாகிய உப்பாற்று பாலம்

ஆனைமலையில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக உப்பாற்று பாலம் குளம் போல் காட்சி அளிக்கிறது. அதனால் பாலம் சேதமடை வாய்ப்பு உள்ளதால் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-03-24 13:46 GMT
பொள்ளாச்சி

ஆனைமலையில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக உப்பாற்று பாலம் குளம் போல் காட்சி அளிக்கிறது. அதனால் பாலம் சேதமடை வாய்ப்பு உள்ளதால் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பாலத்தில் தேங்கிய தண்ணீர்

ஆனைமலை சுங்கத்தில் இருந்து வெப்பரை, காக்காகொத்தி பாறை, சுள்ளிமேட்டுபதி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்வதற்கு வசதியாக உப்பாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு உள்ளது. மேலும் தேங்காய், நெல் போன்ற விளை பொருட்களை விவசாயிகள் இந்த பாலம் வழியாக கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் பாலத்தின் கரையோரம் குடிநீர் குழாய்கள் மற்றும் தனியார் தோட்டங்களுக்கு செல்லும் குழாய்கள் செல்கின்றன.
இந்த நிலையில் குழாய்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் பாலத்தில் கடந்த ஒரு வாரமாக தேங்கி நிற்கிறது. 


 இதனால அந்த வழியாக சென்று வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பாலத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்பதால் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் தொடர்ந்து பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சேதமடைவதற்கு வாய்ப்பு உள்ளது. 
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

சேதமடைய வாய்ப்பு

ஆனைமலை உப்பாற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள பாலத்தில் கடந்த சில நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி தேங்கி நிற்கிறது. இந்த பாலத்தின் வழியாக நெல் அறுவடை எந்திரம், லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பாலம் வலுவிழந்து சேதமடைவதற்கு வாய்ப்பு உள்ளது.


பாலம் சேதமடைந்தால் பல கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்படும். விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும். பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும். பாலத்தில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்