பழங்குடியின மக்கள் 45 பேருக்கு சாதி சான்றிதழ்

கிணத்துக்கடவு அருகே பழங்குடியின மக்கள் 45 பேருக்கு சாதி சான்றிதழை சப்-கலெக்டர் வழங்கினார்.;

Update: 2022-03-24 13:46 GMT
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள சொக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட சட்டக்கல் புதூர், கருப்பட்டி பாறை பகுதிகளில் வசித்துவரும் பழங்குடியின மக்களுக்கு கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு வருவாய்த்துறை மூலம் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் பழங்குடியின மக்கள் வீட்டு மனை மற்றும் சாதி சான்றிதழ் கேட்டு வருவாய் துறையினரிடம் விண்ணப்பம் கொடுத்தனர். இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த வருவாய் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.அதன்பின்னர் வருவாய் துறை சார்பில் சாதிச்சான்று மற்றும் இலவச வீட்டு மனை பட்டாக்கள் பெற தகுதியான பயனாளிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
இந்தநிலையில் சொக்கனூர் அடுத்துள்ள சட்டக் கல்புதூர் கருப்பட்டி பாறைப் பகுதியில் பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் மற்றும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் கலந்துகொண்டு பழங்குடியின மக்கள் 45 பேருக்கு சாதி சான்று மற்றும் 9 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி பேசினார்.
இதில் கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா, தலைமையிடத்து துணை தாசில்தார் ராமராஜ், கிணத்துக்கடவு வருவாய் ஆய்வாளர் லலிதா, ஊராட்சி தலைவர் பிரபு என்கிற திருநாவுக்கரசு, கிராம நிர்வாக அலுவலர்கள் மதுக்கண்ணன், ஜெகதீஷ் குமார் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்