கார் மோதியதில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் சாவு
சேத்துப்பட்டு அருகே கார் மோதியதில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சேத்துப்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 60), மின்வாரிய ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதே பகுதியை சேர்ந்த அரங்கநாதன் (65), தொழிலாளி. இவர்கள் இருவரும் நண்பர்கள்.
நேற்று முன்தினம் முனுசாமியும், அரங்கநாதனும் மோட்டார் சைக்கிளில் கெங்காபுரம் கிராமத்திற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து சமத்துவபுரத்திற்கு திரும்பினர்.
அப்போது மாரியம்மன் கோவில் பகுதியில் சென்ற போது சேத்துப்பட்டில் இருந்து ஆரணி நோக்கி சென்ற கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் முனுசாமியும், அரங்கநாதனும் படுகாயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முனுசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அரங்கநாதன் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜ், வேலு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.