கொரியர் வேனில் கடத்தப்பட்ட 54 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

விளாத்திகுளம் அருகே கொரியர் வேனில் கடத்தப்பட்ட 54 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2022-03-24 12:46 GMT
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே கொரியர் வேனில் கடத்தப்பட்ட 54 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கொரியர் வேனில் சோதனை
விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அம்பேத்கர் தெருவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 
அந்த வழியாக வந்த தனியார் கொரியர் வேனை போலீசார் தடுத்து நடத்தினர். போலீசாரை பார்த்தவுடன் அந்த வேனில் இருந்த 3 பேர் தப்பி ஒடிவிட்டனர். வேனுக்குள் இருந்த ஒருவரை போலீசார் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். இதைதொடர்ந்து அந்த வேனில் போலீசார் சோதனை நடத்தினர்.
ரேஷன் அரிசி கடத்தல் 
அப்போது வேனுக்குள் சட்டவிரோதமாக  2750 கிலோ எடை கொண்ட 54 மூட்டை ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக பிடிபட்டநபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கோவில்பட்டியை சேர்ந்த ராமர் பாண்டியன் மகன் ராஜா(வயது 30) என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். ரேஷன் அரிசி மூட்டைகளையும்,  கடத்தலுக்கு பயன்படுத்திய கொரியர் வேனையும், பறிமுதல் செய்த போலீசார், மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
3 பேருக்கு வலைவீச்சு
மேலும், போலீசார் தப்பியோடிய 3 பேர்கள் குறித்தும், இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்