நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 22 வீடுகள் இடிப்பு
நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 22 வீடுகள் இடிப்பு
உடுமலை அருகே நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 22 வீடுகள் இடிக்கப்பட்டன. கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து 10 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. .
நீர்நிலை ஆக்கிரமிப்பு
தமிழகம் முழுவதிலும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. அந்த வகையில் உடுமலையை அடுத்த பள்ளபாளையம் கிராமத்தில் செட்டியார் குளத்தில் இருந்து செங்குளத்திற்கு செல்லும் நீர் வழிப்பாதையில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருப்பது அதிகாரிகள் ஆய்வின் போது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து நேற்று காலை உடுமலை ஆர்.டி.ஓ.கீதா தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது. முதலில் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 22 வீடுகள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அத்துடன் தென்னை மரங்களும் வெட்டி அகற்றப்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
பின்னர் காலை 11 மணியளவில் கருப்பண்ணசாமி மற்றும் கருவண்ணராயன் கோவில்களை அகற்றுவதற்கு அதிகாரிகள நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு ஊர் பொதுமக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்ததுடன் போலீசாரை தடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்த போலீசார் முயற்சித்தனர். அப்போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையில் கோவிலின் முன்பாக 10- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அங்கிருந்து பாதுகாப்புடன் அப்புறப்படுத்தினார்கள். மேலும் போலீசாரை முன்னேற விடாமல் தடுத்து பாதையில் தென்னை மட்டைகள் மரக்கிளைகளை கொண்டு பொதுமக்கள் தடுப்புகளை ஏற்படுத்தினார்கள்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் வந்தார். அவரும்,அனைத்து துறை அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது கோவிலை அகற்றிக்கொள்வதற்கு 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் வழங்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் 6 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
மாற்று இடம் வழங்க வேண்டும்
இந்த பிரச்சினை குறித்து ெபாதுமக்கள் கூறியதாவது
இந்தப் பகுதியில் நீண்ட நாட்களாக வீடு கட்டி குடியிருந்து வருகிறோம்.இந்த சூழலில் திடீரென மாற்று இடம் கூட வழங்காமல் குடியிருந்த வீடுகளை இடித்து அப்புறப்படுத்தி விட்டார்கள்.
இதனால் நாங்கள் வசிப்பதற்கு இடம் இல்லாமல் குழந்தைகளுடன் உடமைகளோடு தெருவில் அனாதையாக நிற்கின்றோம்.எனவே எங்களுக்கு மாற்று இடம் வழங்குவதோடு மட்டுமல்லாமல் புதிதாக வீடுகளை கட்டி கொடுப்பதற்கும் அதிகாரிகளும் அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் வருவாய் துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட 7 துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.ஆக்கிரமிப்பு அகற்றுவதை முன்னிட்டு போலீசார், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.