பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சத்துணவில் பால், பால்பவுடர் வழங்கக்கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
சத்துணவில் குழந்தைகளுக்கு பால், பால்பவுடர் வழங்கக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஆவின் அலுவலகம் முன்பு நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ராமநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுச்செயலாளர் முகமதுஅலி, மாவட்ட பொருளாளர் உதயகுமார், பணியாளர் சங்க மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
இதில் பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி பசும் பாலுக்கு ரூ.42 எனவும், எருமைப் பாலுக்கு ரூ.51 எனவும் உயர்த்தி அறிவிக்க வேண்டும்.
ஆவின் பாலை ஒரு லிட்டருக்கு ரூ.3 வீதம் விற்பனை விலையை குறைத்ததால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய மாநில அரசே ரூ.300 கோடியை ஆவின் ஒன்றியங்களுக்கு வழங்கிட வேண்டும்.
குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் பால், பால்பவுடர் சேர்த்து வழங்கிட வேண்டும். பால் கொள்முதலை 32 லட்சம் லிட்டரில் இருந்து ஒரு கோடி லிட்டராக உயர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.