தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளாக கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2022-03-24 11:52 GMT
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பட்டிணம்பட்டியை சேர்ந்தவர் ராமன். அவருடைய மகன் சின்னத்தம்பி (வயது 32). கூலித்தொழிலாளி. இவர், நத்தத்தை அடுத்த மூங்கில்பட்டியை சேர்ந்த பானுப்பிரியா (19) என்ற இளம்பெண்ணை ஒருதலைபட்சமாக காதலித்து வந்தார். மேலும் அந்த பெண்ணிடம் தன்னை காதலிக்கும்படி கூறி வற்புறுத்தினார்.

இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு மூங்கில்பட்டி பகுதியில் பானுப்பிரியா நடந்து சென்ற போது அங்கு வந்த சின்னத்தம்பி, அவரை கையை பிடித்து இழுத்துள்ளார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பானுப்பிரியா, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்த புகாரின் பேரில் இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக சின்னத்தம்பி மீது நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவர் மீது திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புருஷோத்தமன், குற்றம்சாட்டப்பட்ட சின்னத்தம்பிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து சின்னத்தம்பியை மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

மேலும் செய்திகள்