திருமுருகநாதசுவாமி கோவில் தீர்த்த கிணற்றில் கொட்டப்படும் கழிவுகள்

திருமுருகநாதசுவாமி கோவில் தீர்த்த கிணற்றில் கொட்டப்படும் கழிவுகள்

Update: 2022-03-24 10:36 GMT
அனுப்பர்பாளையம், 
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் பிரசித்தி பெற்ற திருமுருகநாதசுவாமி கோவில் உள்ளது. அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினமும் இந்த கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் கோவில் வளாகத்தின் பின்புறம் உள்ள தீர்த்த கிணற்றில் ஏராளமான கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக பிளாஸ்டிக் பாட்டில்கள் கிணற்றில் அதிக அளவில் போடப்பட்டு மிதக்கின்றன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களை பயன்படுத்திவிட்டு, கழிவுகளை கிணற்றில் வீசுவதாக கூறப்படுகிறது. பரிசுத்தமாக கருதப்படும் தீர்த்த கிணற்றில் கழிவுகள் கொட்டப்படுவது அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீர்த்த கிணற்றில் கழிவுகளை கொட்டுவதை நிறுத்தி சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்றும், கோவில் நிர்வாகம் கிணற்றின் மேல்பகுதியில் வலை அல்லது மூடியை போட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இயற்கை மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் திருமுருகநாதசுவாமி கோவிலின் பின்புறத்தில் ராகு, கேது கோவிலுக்கு செல்லும் வழி சில நேரங்களில் திறந்தே இருப்பதால் கோவிலுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. அன்னியர்களும், கோவிலுக்கு சம்பந்தமில்லாதவர்களும் கோவிலுக்குள் எளிதாக நுழையும் நிலையும் உள்ளது. எனவே உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை கோவில் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்