புளியங்குடி:
புளியங்குடி நகராட்சி கவுன்சிலர்கள் முதலாவது கூட்டம், நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடந்தது. நகராட்சி தலைவி விஜயா சவுந்திரபாண்டியன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் குமார்சிங், பொறியாளர் முகைதீன் அப்துல்காதர், சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, ஆய்வாளர்கள் பிச்சையா பாஸ்கர், கைலாசசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி மேலாளர் சண்முகவேல் வரவேற்று பேசினார்.
வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லத்துரை, கடையநல்லூர் நகராட்சி தலைவர் ஹபிபூர் ரகுமான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நகராட்சி துணை தலைவர் அந்தோணிசாமி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புளியங்குடி பெருமாள் கோவில் முன்பு உயர்கோபுர மின்விளக்கு அமைப்பது. கோடைக்காலம் நெருங்குவதால் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் திட்ட பணிகளை பராமரிப்பது. சிந்தாமணியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பது. அய்யாபுரத்தில் தேசிய பொது சுகாதார நல மையம் அமைக்க அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.