எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது; சமையல் கியாஸ் விலை உயர்வை ஏற்க முடியாது- இல்லத்தரசிகள் கருத்து
சமையல் கியாஸ் விலை உயர்வு எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் இருப்பதாக இல்லத்தரசிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு
சமையல் கியாஸ் விலை உயர்வு எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் இருப்பதாக இல்லத்தரசிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
விலை உயர்வு
பெட்ரோல், டீசல் விலை கடந்த 4½ மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் உயர்த்தப்பட்டது. இதேபோல் சமையல் கியாஸ் விலையும் ரூ.50 உயர்த்தப்பட்டது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.
இதுகுறித்து ஈரோட்டை சேர்ந்த பெண்கள் தெரிவித்து உள்ள கருத்து வருமாறு:-
பெரியார்நகரை சேர்ந்த மாதேஸ்வரி:
பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து சமையல் கியாஸ் விலையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. வரவை காட்டிலும் செலவு அதிகமாக இருப்பதால் சமாளிப்பதற்கே பெரும் சிரமமாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மெதுமெதுவாக உயர்த்தப்பட்டு விலைவாசி காரணமாக தற்போது இருமடங்கு செலவு ஏற்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அரிசியின் விலையும் தற்போது அதிகரித்து விட்டது. 25 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.850-க்கு விற்பனை செய்யப்பட்டது, தற்போது ரூ.1,350 வரை விற்பனையாகிறது.
இந்த விலைவாசி உயர்வு காரணமாக நடுத்தர குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். கடன் வாங்கி செலவு செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சமையல் கியாஸ் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மானியம்
சாஸ்திரிநகரை சேர்ந்த சத்யா:
நான் தையல் வேலை செய்து வருகிறேன். வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என்பதால் வீட்டில் இருந்தே தையல் வேலை செய்து கிடைக்கும் வருமானத்தில் குடும்ப செலவுகளை சமாளித்து வருகிறோம். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.710 ஆக இருந்தது. அதுவே தற்போது 900 ரூபாயை கடந்து விற்பனையாகிறது. மேலும், ரூ.50 உயர்த்தப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பலமுறை விலை உயர்த்தப்பட்டதால், மேலும் விலை உயர்த்தப்படுமா? என்ற பயம் இருந்து கொண்டே இருக்கிறது. முன்பு மானியம் கொடுக்கும்போது விலை ஏற்றப்பட்டாலும் ஓரளவுக்கு சமாளிக்க முடிந்தது. ஆனால் தற்போது மானியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை. இதனால் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மத்திய அரசு மீண்டும் மானியம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கலாம். இதன் மூலம் இல்லத்தரசிகளின் பாரம் சற்று குறையும்.
பெரும் பாதிப்பு
மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த கவிதா:
சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு இருப்பது ஏற்க முடியாது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் வேலை கிடைக்காமல் வருமானமின்றி சிரமப்பட்டு வந்தோம். இதனால் பெரும்பாலான நடுத்தர குடும்பத்தினர் கடன் வாங்கி குடும்ப செலவுகளை செய்தார்கள். இந்தநிலையில் சமையல் கியாஸ் விலையை உயர்த்துவது அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
தனிகவனம்
சின்னசேமூரை சேர்ந்த பட்டம்மாள்:
சமையல் கியாஸ் விலை உயர்வு மட்டுமின்றி பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாகவும் விலைவாசி அதிகரித்து உள்ளது. எந்த பொருட்களை எடுத்தாலும் கடந்த சில ஆண்டுகளில் 3 அல்லது 4 மடங்கு விலை உயர்த்தப்பட்டு இருப்பதை காணலாம். இந்த விலைவாசி உயர்வை கடைகளில் எந்த ஒரு பொருட்களையும் வாங்கும்போது உணரலாம். வீட்டு வாடகையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இந்த கடுமையான சூழ்நிலையை சமாளித்து வாழ்ந்து வரும் நிலையில் மீண்டும் சமையல் கியாஸ் விலை உயர்த்தப்பட்டு இருப்பது எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்.